பறக்கும் படை சோதனையில் 20 மூட்டை குட்கா பறிமுதல்
By DIN | Published On : 28th March 2019 08:59 AM | Last Updated : 28th March 2019 08:59 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் 20 மூட்டை குட்கா புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் கள்ளக்குறிச்சி சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த கனியாமூர் மும்முனை சந்திப்பில் பறக்கும்படை அலுவலரும் கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலருமான எஸ்.சுமதி தலைமையில் போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
சின்னசேலம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வேகமாக வந்த காரை, நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா 20 மூட்டைகளில் இருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த பிச்சை மகன் பரிமனம் (45) என்பது தெரிய வந்தது. அவர், ஆத்தூரில் இருந்து குட்காவை கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் மங்கலம்பேட்டைக்கு கொண்டு செல்வதாகக் கூறினாராம். அதன் உரிமையாளர் யார் என்று கூற மறுத்து விட்டாராம்.
குட்காவுடன் கார் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை, சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப் பதிவு செய்யுமாறு தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கூறினார். அதன் பேரில், சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுநர் பரிமனத்தை கைது செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...