மத்தியில் வலிமையான ஆட்சி அமைய மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மத்தியில் வலிமையான ஆட்சி அமைய மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
Updated on
1 min read

மத்தியில் வலிமையான ஆட்சி அமைய மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
 அதிமுக கூட்டணியில் போட்டியிடும் கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்.கே.
 சுதீஷ், விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை பிரசாரம் செய்தார்.
 அப்போது அவர் பேசியதாவது:
 மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட கட்சிகள் அதிமுக தலைமையில் ஓரணியாகவும், மக்கள் உரிமைகளை, நீராதார உரிமைகளை பாதுகாக்கத் தவறியவர்கள் திமுக தலைமையில் ஓரணியாகவும் இந்த மக்களவைத் தேர்தலைச்
 சந்திக்கின்றன.
 மத்தியில் காங்கிரஸ்-
 திமுக கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியிலும், தற்போதைய பாஜக ஆட்சியிலும் சிறந்த திட்டங்களை செயல்படுத்தியவர்கள் யார் என்பதை மக்கள் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.
 இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்றபோது, அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசுடன் இணைந்து ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி.
 கடந்த ஐந்து ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது. ரூ.1,400 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை, பொலிவுறு நகரம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் தமிழகத்துக்கு வந்தன.
 அதேபோல, தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, சட்டப் போராட்டம் நடத்தி 2013-இல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்தார். இதன் மூலம் நீராதார உரிமை பாதுகாக்கப்பட்டது.
 அவரது தலைமையிலான அதிமுக ஆட்சியில், பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதுபோன்ற திட்டங்கள் தற்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியிலும் தொடர்கின்றன. கள்ளக்குறிச்சி புதிய மாவட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
 தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, சாதி, மத மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்தன.
 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தலையொட்டி சைக்கிளில் வலம் வந்தும், கடைகளில் தேநீர் அருந்தியும், பல்வேறு வேடங்கள் போட்டும் பொதுமக்களைக் கவர முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சி மக்களிடம் எடுபடவில்லை. அதிமுகவில் அடிமட்ட தொண்டரும் முதல்வராக முடியும். அந்த உள்கட்சி ஜனநாயகம் திமுகவில் இல்லை. ஆகவே, தமிழகத்தில் நல்லாட்சி தொடரவும், மத்தியில் வலிமையான ஆட்சி அமையவும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
 பிரசாரத்தின்போது, சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலர் இரா.குமரகுரு, லட்சுமணன் எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 தொடர்ந்து, புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமியை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 5 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
 பின்னர், அவர் கடலூரில் பாமக வேட்பாளர் இரா.கோவிந்தசாமியை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com