விழுப்புரத்தில் காரில் கொண்டு சென்ற ரூ.66 லட்சம் ரொக்கம் பறிமுதல்
By DIN | Published On : 30th March 2019 09:04 AM | Last Updated : 30th March 2019 09:04 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.66 லட்சம் ரொக்கத்தை தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் பாணாம்பட்டு பாதையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் உதவிப் பொறியாளர் ராஜேஷ் தலைமையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை மடக்கி சோதனையிட்டனர். அதில், கத்தை, கத்தையாக ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.
காரில் இருந்த சதீஷ்குமார், ராமஜெயம் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தனியார் வங்கி ஊழியர்கள் என்றும், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியிலிருந்து பண்ருட்டி வங்கிக்கு பணத்தைக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
இருப்பினும் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி, கொண்டு செல்லப்பட்ட அந்த பணத்தை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, தேர்தல் பொது பார்வையாளர் மொஹிந்தர்பால் முன்னிலையில் விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இல.சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தனியார் வங்கி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரகத்துக்கு நேரில் வந்து, பணத்தை மீண்டும் ஒப்படைக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். ஆனால், பணத்தை ஒப்படைக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் கூறியதாவது: பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருமானவரித் துறையினருக்கு தகவல் தெரிவித்து, உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் நடத்தை விதிகளின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை ரூ.2 கோடியே 9 லட்சத்து 970 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...