விழுப்புரம் திரௌபதி கோயிலில் தீ மிதி விழா
By DIN | Published On : 30th March 2019 09:00 AM | Last Updated : 30th March 2019 09:00 AM | அ+அ அ- |

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பழைமையான இந்தக் கோயிலில் தீமிதி உற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, அர்ச்சுனர், திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நாள்தோறும் சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வான தீ மிதித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
பின்னர், கோயில் அருகில் தீ குண்டம் தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட திரௌபதி அம்மனை பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு தீ மிதித்து வழிபட்டனர். இதேபோல, விரதமிருந்த பக்தர்கள் ஏராளமானோர் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...