விழுப்புரம் மாவட்டத்தில் விளையாட்டுத் துறை சார்பில் நடைபெற்று வரும் கோடை விளையாட்டுப் பயிற்சி முகாமில் 350 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2019 - 20ஆம் ஆண்டுக்கான கோடை கால பயிற்சி முகாம் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டிப் போட்டிகளில் ஊக்கம் அளிக்கும் வகையில், இந்த கோடை கால விளையாட்டுப் பயிற்சி நடைபெறுகிறது.
இதையொட்டி, விழுப்புரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட தடகளப் போட்டிகளுக்கும், குழுப் போட்டிகளான கையுந்துபந்து, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டுகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
தினந்தோறும் காலை 6 முதல் 8 மணி வரையும், மாலை 4 முதல் 6 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் தலைமையில், பயிற்சியாளர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இதில், 200 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாணவிகளுக்கு...: இதேபோல, மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், கையுந்துபந்து, கூடைப்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டுகளுக்கு காலை, மாலை வேளைகளில் பயிற்சி அளிக்கப்படுகின்றன.
இதில், 150 மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர்.
தொடர்ந்து வரும் 15-ஆம் தேதி வரை 15 நாள்கள் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியின் நிறைவாக, இதில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
சிறப்பான திறனை வெளிப்படுத்தும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க முன்னுரிமை வழங்கப்படும் என்று விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.