தென்பெண்ணையாற்றில் செத்து மிதக்கும் மீன்கள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 05th May 2019 05:36 AM | Last Updated : 05th May 2019 05:36 AM | அ+அ அ- |

செங்கம் அருகே சாத்தனூர் அணை பின்புறம் தென்பெண்ணையாற்றில் மீன்கள் மர்மான முறையில் செத்து மிதப்பதை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செங்கம் அருகே சாத்தனூர் அணையின் பின்புறம் தாழையூத்து கிராமம் அருகே செல்லும் தென்பெண்ணை ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் எடுக்கும் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக மீன்கள் இறந்து மிதந்தன.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் அதிகரித்து குடிநீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டது. மீன்கள் இறப்புக்கு மர்ம நபர்கள் யாராவது தண்ணீரில் விஷம் கலந்தார்களா அல்லது வெப்பநிலை மாற்றத்தால் மீன்கள்
இறந்தனவா என்பது குறித்து அறியப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகள், சாத்தனூர் அணை மீன் வளர்ப்புத் துறை அதிகாரிகள் சாத்தனூர் அணையில் இருந்து படகு மூலம் மீன்கள் இறந்து மிதக்கும் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டதா அல்லது வெப்பநிலை மாற்றத்தால் மீன்கள் இறந்தனவா என்பது குறித்து அறிய, தண்ணீர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், சாத்தனூர் அணை போலீஸாரும் யாராவது தண்ணீரில் விஷம் கலந்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.