ஏப்ரல் மாத சம்பளம் தாமதத்தால் பகுதி நேர ஆசிரியர்கள் அதிருப்தி
By DIN | Published On : 05th May 2019 05:37 AM | Last Updated : 05th May 2019 05:37 AM | அ+அ அ- |

கல்வித் துறையில் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வருவோருக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்க தாமதமாவதால், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் உடல்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக் கலை, வாழ்வியல் திறன் கல்வி ஆகிய 8 பாடங்களை பகுதிநேர ஆசிரியர்களை நியமித்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், ரூ.7,700 தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருந்து வரும் நிலையில், தற்போது சம்பளமும் உரிய தேதியில் வழங்கப்படவில்லை.
ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்குவதற்காக மாநில மையத்தில் இருந்து அனைத்து மாவட்ட மையங்களுக்கும் இதுவரை நிதி அனுப்பப்படவில்லை என்பது கவலை அடையச் செய்கிறது. கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக இதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளுக்கு கோடைகால விடுமுறை விடப்பட்டுவிட்டது. நிரந்தர ஆசிரியர்களுக்கு சம்பளப் பிரச்னை கிடையாது. ஆனால், பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதச் சம்பளம் வழங்கப்படாததால், கடந்த 7 ஆண்டுகளாக இழப்பை சந்தித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.14
ஆயிரத்து 203 மாதம் சம்பளமாக தர முடிகிறது. சம்பளத்துடன் 6 மாதம் மகப்பேறு விடுப்பும் தருகிறார்கள். இங்கு அவ்வாறு தருவதில்லை. போராட்டக் காலங்களில் பள்ளிகளை இயக்க பகுதிநேர ஆசிரியர்களை பயன்படுத்தி வரும் அரசு, அவர்களின் கோரிக்கையை கேட்பதில்லை.
எனவே, அனைத்து ஆசிரியர்களுக்கும் உள்ளதைப்போல, ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதிக்குள் சம்பளத்தை வழங்கவும், விடுமுறை காலமான மே மாதமும் சம்பளத்தை வழங்கவும் வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...