கத்திரி வெயில்: பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 05th May 2019 05:33 AM | Last Updated : 05th May 2019 05:33 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் முதல் நாளான சனிக்கிழமையே 106 டிகிரி அளவில் இருந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் 15-ஆம் தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்தபடி இருந்தது. அப்போது, சராசரியாக 100 டிகிரி பாரன்ஹீட் அளவில் வெப்பம் பதிவாகி வந்தது.
இந்த நிலையில், கத்திரி வெயில் என்றழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடக்கத்தையொட்டி, கடந்த 3 நாள்களாக கடும் வெயில் பதிவாகி வந்தது. 104 டிகிரி முதல் 105 டிகிரி வரை வெயில் தாக்கம் இருந்தது.
கத்திரி வெயில் தொடக்க நாளான சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து கடுமையான வெயில் தாக்கம் தொடங்கியது. தொடர்ச்சியாக முற்பகல் 11 மணியளவில் 98 டிகிரி பாரன்ஹீட் அளவிலிருந்து பிற்பகல் 2 மணியளவில் அதிகபட்சமாக 106 டிகிரி அளவில் வெயிலின் அளவு பதிவானது. இந்த வெயிலின் தாக்கம் மாலை 4 மணி வரை நீடித்தது.
இதனால், பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகளிலும், முக்கிய நெடுஞ்சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து குறைந்து வழக்கத்துக்கு மாறாக வெறிச்சோடியது. பேருந்து நிலையத்திலும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது.
வெயில் தாக்கம் காரணமாக சாலைகளில் அனல் காற்று வீசியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். வெயிலை சமாளிக்க குளிர்பானங்கள், மோர், பழச்சாறு, இளநீர் அருந்துவதற்கு மக்கள் திரண்டனர். மேலும், நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த நிலையில், வரும் 29-ஆம் தேதி வரை கத்திரி வெயில் இருக்கும் என்பதால், பொதுமக்கள் பகல் நேரங்களில் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...