குடிநீர் பிரச்னை: சின்னசேலத்தில் மக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 05th May 2019 05:36 AM | Last Updated : 05th May 2019 05:36 AM | அ+அ அ- |

சின்னசேலம் பேரூராட்சிப் பகுதிக்கு உள்பட்ட நைனார்பாளையம் சாலையில் வசித்து வரும் மக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகிக்காததைக் கண்டித்து, பேரூராட்சி வாகனத்தை அந்தப் பகுதி மக்கள் சனிக்கிழமை சிறைபிடித்து
மறியலில் ஈடுபட்டனர்.
சின்னசேலம் பேரூராட்சிக்கு உள்பட்ட சில பகுதிகளுக்கு தண்ணீர் லாரி, டிராக்டர் மூலம் பேரூராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் விநியோகித்து வருகின்றனர். இந்த நிலையில், நைனார்பாளையம் சாலையில் வசிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்காமல், அதனை அடுத்த பகுதியான தில்லை நகர் மக்களுக்கு பேரூராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்ததாகத் தெரிகிறது.
இதனால், அதிருப்தியடைந்த நைனார்பாளையம் சாலைப் பகுதி மக்கள், தில்லை நகரில் குடிநீர் விநியோகித்துவிட்டு வந்த டிராக்டரை காலிக் குடங்களுடன் சிறைபிடித்து அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகலறிந்து அங்கு வந்த பேரூராட்சி ஊழியர்கள், நைனார்பாளையம் பகுதி மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...