விக்கிரவாண்டி பகுதியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது
By DIN | Published On : 05th May 2019 12:05 AM | Last Updated : 05th May 2019 12:05 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் போலி மருத்துவர்கள் இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
விக்கிரவாண்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காத போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் எஸ்.சுகந்தி தலைமையில், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், நிர்வாக அலுவலர் நடராஜன், மருந்தாளுநர் கதிரவன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் விக்கிரவாண்டி பகுதியில் சனிக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
விக்கிரவாண்டி கடை வீதியில், விக்கிரவாண்டி அருகே உள்ள கயத்தூரைச் சேர்ந்த செல்வபாலன் (62) நடத்தி வந்த ஹோமியோபதி மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அப்போது, செல்வபாலன் விழுப்புரத்தில் ஹோமியோபதி மருத்துவம் படித்ததாக போலி மருத்துவச் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்து மருந்து, ஊசி உள்ளிட்ட சாதனங்களை சுகாதாரக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.
வீடூரில்...: இதேபோல, விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் கிராமத்தில் சர்க்கரை நோய்க்கு இயற்கை மருந்து வழங்குவதாகக் கூறி, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த ராஜி மகன் ரவிச்சந்திரனின் (40) மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.
அப்போது, மருத்துவம் தொடர்பான எந்த படிப்பும் படிக்காத நிலையில், ரவிச்சந்திரன் சர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவப் பொடி தயாரித்து, பொதுமக்களிடம் ரூ.1,500க்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த இயற்கை மருத்துவப் பொடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் எஸ்.சுகந்தி புகார் அளித்தார். அதன்பேரில், போலி மருத்துவர்களான செல்வபாலன், ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...