பெற்றோர், தம்பியைக் கொன்று விட்டு ஏ.சி. தீப்பிடித்ததில் இறந்ததாக நாடகமாடிய மகன், மருமகள் கைது
By DIN | Published On : 19th May 2019 09:50 AM | Last Updated : 19th May 2019 09:50 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தந்தை, தாய், தம்பியைக் கொன்று விட்டு குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய மகன், மருமகளை போலீஸார் கைது செய்தனர்.
திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவைச் சேர்ந்தவர் ராஜி. இவர் கடந்த
15-ஆம் தேதி தனது மனைவி கலைச்செல்வி (52), மகன் கெளதமன் (28) ஆகியோருடன் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்ட ஓர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு அறையில் ராஜியின் மூத்த மகன் கோவர்த்தனன் (30), அவரது மனைவி தீபா காயத்ரி (27) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.அதிகாலையில் பார்த்த போது, ராஜி, கலைச்செல்வி, கெளதமன் ஆகியோர் இறந்து கிடந்தனர். அறையிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு அவர்கள் தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது.
இதுதொடர்பாக திண்டிவனம் போலீஸார் வழக்குப் பதிந்து, விபத்தா, கொலையா? என விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, சந்தேகத்தின் பேரில் கோவர்த்தனன், தீபா காயத்ரி ஆகிய இருவரிடமும் போலீஸார் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
வழக்கில் திருப்பம்: இதனிடையே, சம்பவம் நடைபெற்ற வீட்டை விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சனிக்கிழமை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தச் சம்பவம் திட்டமிட்ட கொலை என தெரிய வருகிறது. தாய், தந்தை, தம்பியை கோவர்த்தனன் திட்டமிட்டு எரித்துக் கொன்றதையும், அதற்கு அவரது மனைவி தீபா காயத்ரி உடந்தையாக இருந்ததையும் ஒப்புக்கொண்டனர். கோவர்த்தனன் ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலை கிடைக்காததால் தனியாக பயிற்சி மையம் நடத்தி வந்தார்.
அதில் போதிய வருமானம் கிடைக்காததால், 2 கார்களை வாங்கி வாடகைக்கு விடும் தொழில் செய்தார்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கோவர்த்தனன் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. ஆனால், வருகிற ஜூன் 6-ஆம் தேதி கௌதமின் திருமணத்தை தாய், தந்தை ஆடம்பரமாக நடத்தத் திட்டமிட்டதாகத் தெரிகிறது. இது கோவர்த்தனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இருவர் கைது: சில நாள்களுக்கு முன்பு, கோவர்த்தனன் 3 மதுப் புட்டிகளில் பெட்ரோல் நிரப்பி, அதன் வாய்ப்பகுதியை காற்று புகாதவாறு மூடி தனது அறையில் பாதுகாத்து வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி இரவு அவரது தந்தை, தாய், தம்பி கௌதமன் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது அந்த அறைக்குள் பெட்ரோல் நிரப்பப்பட்ட ஒரு பாட்டிலில் தீ வைத்து கோவர்த்தனன் வீசியுள்ளார். மேலும், 2 பாட்டில்களை ஹாலில் தீ வைத்து வீசி, கதவின் முன்பகுதியை மூடியுள்ளார். இதைக் கண்டு, பதறியபடி அறையின் பின்பக்கக் கதவு வழியாக வெளியே ஓடி வந்து, கூக்குரலிட்ட தந்தை ராஜியை கோவர்த்தனன் சரமாரியாக கத்தியால் வெட்டியதில் அவர் உயிரிழந்தார். அவரிடமிருந்து கத்தி, மதுப் புட்டிகளின் உடைந்த பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார். கைது செய்யப்பட்ட கோவர்த்தனன், தீபா காயத்ரி ஆகியோர் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
எஸ்.பி.பாராட்டு: இதனிடையே, தனிப் படை அமைத்து, இந்த வழக்கில் விரைந்து துப்பு துலக்கிய திண்டிவனம் டிஎஸ்பி கனகேஸ்வரி, ஆய்வாளர்கள் சீனிபாபு, விஜி, உதவி ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், மோகன் ஆகியோரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டினார்.