விழுப்புரத்தில் பராமரிப்பு நேரத்தை கடந்தும் மின் வெட்டு: மக்கள் அவதி
By DIN | Published On : 19th May 2019 09:50 AM | Last Updated : 19th May 2019 09:50 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் சனிக்கிழமை பராமரிப்பு நேரத்தைக் கடந்தும் இரவு வரை மின் வெட்டு தொடர்ந்ததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
விழுப்புரத்தில் சனிக்கிழமை வழக்கமான மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்பட்டது. அறிவித்ததைப்போல, காலை 9 மணிக்கு மின் நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், மாலை 5 மணிக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்படவில்லை.
நகரின் முக்கியப் பகுதிகளில் 5 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வண்டிமேடு, கே.கே சாலை, சாலாமேடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8 மணிக்குப் பிறகே மின்சாரம் வழங்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் மாலை 5 மணிக்கு வழங்கிய மின்சாரம், இடையிடையே துண்டிக்கப்பட்ட நிலையில், 2 மணி நேரம் தாமதமாகவே மீண்டும் வழங்கப்பட்டது.
இதேபோல, சுற்றுவட்டாரக் கிராமங்களிலும் கடும் மின் வெட்டு நீடித்தது. காலை 9 மணியிலிருந்து மின்சாரம் இன்றி காத்திருந்த பொதுமக்கள், கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை 5 மணிக்குப் பிறகும் மின்சாரம் வழங்கப்படாததால் கடும் அவதியடைந்தனர். குடிநீர், சமையலுக்கான தண்ணீர் தேவைக்குகூட மின்மோட்டாரை இயக்குவதற்கு வழியின்றி இரவு 8 மணி வரை காத்திருந்தனர். அதன் பிறகும் அவ்வப்போது மின்வெட்டு தொடர்ந்ததால், வேதனை அடைந்தனர்.
மின்மாற்றிகள் பழுது: இதுகுறித்து விழுப்புரம் மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: வழக்கம்போல, பராமரிப்புப் பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்பட்டு, பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு மின்சாரம் வழங்கியதும் ஒரே நேரத்தில் பலர் மோட்டார்கள் உள்ளிட்ட மின் சாதனங்களை பயன்படுத்தியதால், அதிக பயன்பாடு (ஓவர் லோடு) ஏற்பட்டு பல மின்மாற்றிகளில் பழுதடைந்தன.
இதனை முறைப்படி சீரமைப்பதற்காக, ஒட்டுமொத்தமாக மின்சாரத்தை நிறுத்தி, படிப்படியாக சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், ஆங்காங்கே மின் நிறுத்தம் ஏற்பட்டது. இரவு 11 மணிக்குள் நிலைமை சீரடையும் என்றனர்.