விழுப்புரத்தில் பாரம்பரிய விதைத் திருவிழா: 450 நெல் வகைகள் இடம்பெற்றன
By DIN | Published On : 19th May 2019 09:53 AM | Last Updated : 19th May 2019 09:53 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில், பாரம்பரிய விதை திருவிழா, விதைகள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இதில், 450 வகையான பாரம்பரிய நெல் வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
விழுப்புரம் மகாராஜபுரம் ஜெயசக்தி திருமண மண்டபத்தில் பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில், பாரம்பரிய விதைத் திருவிழா சனிக்கிழமைத் தொடங்கியது. பசுமை இயற்கை விவசாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.பாண்டியன் வரவேற்று, பாரம்பரிய விதைத் திருவிழாவின் நோக்கம் குறித்து விளக்கினார்.
பின்னர், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில், பாரம்பரிய விதைகள், இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
கே.பாண்டியன் தலைமை வகித்தார். இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளான சேலம் மாவட்டம் தலைவாசல் பாபு, புதுவை மாநிலம் வேணுகோபால், அரிகிருஷ்ணன், பண்ருட்டி விதை கணேசன், இளங்குழலி உள்ளிட்டோர் இயற்கை விவசாயம் மேற்கொள்வதன் பயன்கள், லாபகரமான விவசாயம், உடலுக்கு தீங்கிழைக்காத உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து சாதித்துள்ளது குறித்து விளக்கிப் பேசினர். இதில், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற கண்காட்சியில், 450 வகையான பாரம்பரிய நெல் விதைகள், தாவரவியல் பெயர்களுடன் கூடிய விளக்கத்தோடு வைக்கப்பட்டன. சித்த வைத்திய மூலிகை விதைகள், 200 வகையான கீரை, காய்கனி விதைகள், இயற்கை உணவு எண்ணெய்கள், இயற்கையில் தயாரான உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
பண்ருட்டியைச் சேர்ந்த விதை கணேசன், தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 400 வகையான பாரம்பரிய நெல் விதைகளை காட்சிக்கு வைத்திருந்தார். சங்க இலக்கிய நெல்லான கருடன் சம்பா, புத்தர் சாப்பிட்டதாகக் கூறப்படும் காலான்மக், மறைந்த தமிழக முதல்வர்கள் பெயரில் அறிமுகமான நெல் விதைகள் உள்ளிட்டவை அதில் இடம் பெற்றிருந்தன.
ஏராளமான பொதுமக்கள் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு, அரியவகை விதைகளை பார்வையிட்டுச் சென்றனர். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் (மே 19) விதைகள் கண்காட்சி நடைபெறுகிறது.