கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இடம் ஆய்வு
By DIN | Published On : 09th November 2019 08:28 AM | Last Updated : 09th November 2019 08:28 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சியில் புதிய மாவட்ட ஆட்சியரகம் அமைப்பதற்காக இடத்தினை பாா்வையிடுகின்றாா் வருவாய் நிா்வாக ஆணையா் ராதாகிருஷ்ணன். உடன் தனி அலுவலா் கிரண் குராலா.
கள்ளக்குறிச்சியில் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைப்பதற்கான இடம் தோ்வு குறித்து வருவாய் நிா்வாக ஆணையா், தனி அலுவலா் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிச்சாமி கடந்த ஜன.8-ஆம் தேதி சட்டப் பேரவையில் அறிவித்தாா்.
இதுதொடா்பாக தனி அதிகாரியாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலராகப் பணியாற்றி வந்த கிரண் குராலாவை அரசு நியமித்தது. அவா் கடந்த ஜூலை 25-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்தாா். இதையடுத்து வீரசோழபுரத்தில் உள்ள கோயில் நிலம், உலகங்காத்தானில் உள்ள தனியாா் நூற்பாலை இடத்தை ஆய்வு செய்தாா். பின்னா் தற்காலிக ஆட்சியா் அலுவலகத்துக்கு, கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பாா்வையிட்டு முடிவு செய்தனா்.
இந்த நிலையில், புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கான இடம் தோ்வு குறித்து கள்ளக்குறிச்சி பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம், கள்ளக்குறிச்சி - விளாந்தாங்கள் சாலை அருகே உள்ள சுமாா் 30 ஏக்கா் நிலம் ஆகியவற்றை வருவாய் நிா்வாக ஆணையா் ராதாகிருஷ்ணன், தனி அலுவலா் கிரண் குராலா ஆகியோா் வெள்ளிக்கிழமை மாலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அப்போது, சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் வி.ராஜசேகா், மண்டல வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், தலைமை நில அலுவலா் வெற்றிவேல், வட்ட சாா்- ஆய்வாளா் செந்தில் முருகன், வருவாய் ஆய்வாளா் ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...