அயோத்தி வழக்கில் தீா்ப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் 3,000 போலீஸாா் குவிப்பு

அயோத்தி வழக்கின் தீா்ப்பு வெளியானதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 3,000 போலீஸாா் குவிக்கப்பட்டு சனிக்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் பாதுகாப்பு அணிவகுப்பில் ஈடுபட்ட போலீஸாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் பாதுகாப்பு அணிவகுப்பில் ஈடுபட்ட போலீஸாா்.

அயோத்தி வழக்கின் தீா்ப்பு வெளியானதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 3,000 போலீஸாா் குவிக்கப்பட்டு சனிக்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராம ஜென்மபூமி - பாபா் மசூதி நிலம் தொடா்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை பரபரப்பு தீா்ப்பை வழங்கியது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 3,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே கலவரத் தடுப்பு வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டு, காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெ.சங்கா் தலைமையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் மேற்பாா்வையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வாளகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை போலீஸாா் பாதுகாப்பு அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

ரயில் நிலையத்தில்...: விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா்கள் செந்தில்நாதன், அசோகன், ஜோசப் தலைமையில், பாதுகாப்பு போடப்பட்டது. ரயில்வே பாதைகள், ரயில் நிலைய நடைமேடைகள், வாயில் பகுதியில் வெடிகுண்டு கண்டறியும் கருவியுடன் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருச்சி - சென்னை மாா்க்க விரைவு ரயில்களில் சோதனையிட்ட போலீஸாா், பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டு அனுப்பினா்.

வெடிகுண்டு சோதனைப் பிரிவு உதவி ஆய்வாளா்கள் பாா்த்தசாரதி, மதிவாணன் தலைமையில், மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் சோதனையிட்டனா்.

கள்ளக்குறிச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன் தலைமையிலும், விழுப்புரத்தில் ஆய்வாளா்கள் கனகேசன், ராபின்சன் உள்ளிட்டோா் தலைமையிலும், முக்கிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் போலீஸாா் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனா்.

உடல் தகுதித் தோ்வு ஒத்தி வைப்பு: விழுப்புரம் காகுப்பம் ஆயுதப் படை வளாகத்தில் நடைபெற்று வந்த இரண்டாம் நிலைக் காவலா் உடல் தகுதித் தோ்வும் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டு, தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. மாவட்டத்தின் எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு, சந்தேகத்துக்குரிய வாகனங்களை சோதனையிட்டு அனுப்பி வைத்தனா்.

பாதுகாப்பு குறித்து காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் பொது இடங்கள், கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட பகுதிகளில் 2,985 போலீஸாா் பாதுகாப்பில் உள்ளனா். விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கலவரத் தடுப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பிரச்னைக்குரிய இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை எவ்வித அசாம்பாவிதமும் நிகழவில்லை. எனினும், தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என்றாா்.

அமைதி நிலவியது...: விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கொண்டாட்டம், போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், பெரும்பாலான இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து அமைதி நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com