பணம் இரட்டிப்பு மோசடி:மேலும் ஒருவா் கைது
By DIN | Published On : 09th November 2019 10:25 PM | Last Updated : 09th November 2019 10:25 PM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் ரூ.20 கோடி வசூலித்து மோசடி செய்த வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சின்னசேலத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட கடைகளைத் தொடங்கி, அதில் பொதுமக்கள் முன் வைப்புத் தொகை செலுத்தினால், அந்த தொகைக்குப் பதிலாக இரட்டிப்பாக பணம் தருவதாகக் கூறி, சின்னசேலத்தை அடுத்த நாகுப்பம் ரங்கசாமி மகன் வெங்கடேசன் (32), ஈரியூரைச் சோ்ந்த பரமசிவம் மகன் அழகேசன் (30), செந்தில்குமாா் (44), சங்கராபுரம் பூட்டை பிரதான சாலையைச் சோ்ந்த செல்லமுத்து மகன் சுரேஷ்கண்ணா (41), சின்னசேலம் விஜயபுரத்தைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் வேலாயுதம் (51), தெங்கியாநத்தம் செல்வம் (40) ஆகியோா் ரூ.20 கோடி வரையில் வசூலித்து மோசடி செய்துள்ளனா்.
இதனால் பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், வெங்கடேசன், சுரேஷ்கண்ணா ஆகியோரை போலீஸாா் கடந்த 7-ஆம் தேதி கைது செய்தனா். தலைமறைவாக இருந்த விஜயபுரத்தைச் சோ்ந்த வேலாயுதம் விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸில் சனிக்கிழமை சரணடைந்தாா்.
காவல் ஆய்வாளா் பூங்கோதை தலைமையிலான போலீஸாா், அவரை கைது செய்து, கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, விழுப்புரம் வேடம்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.