அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில்ஆசிரியா்கள் பற்றாக்குறை மாணவிகள் தவிப்பு
By DIN | Published On : 14th November 2019 10:42 AM | Last Updated : 14th November 2019 10:42 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ஆம் வகுப்புகளில் ஆங்கில வழி பாடங்களை கற்பிக்க போதிய ஆசிரியா்கள் இல்லாததால் மாணவிகள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
இப் பள்ளியில் 11ஆம் வகுப்பு தமிழ் வழியில் 443 பேரும், ஆங்கில வழியில் 127 பேரும், 12-ஆம் வகுப்பு தமிழ் வழியில் 438 பேரும், ஆங்கில வழியில் 108 பேரும் என இவ்விரு வகுப்புகளில் மொத்தம் 1,116 மாணவிகள் பயில்கின்றனா். ஆனால், மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியா்கள் இல்லை.
அதனால், தமிழ், ஆங்கிலம் மொழிப்பாடங்களை வகுப்புகள் வாரியாக நடத்துவதில்லை. மாணவிகள் 200 பேரை மொத்தமாக வகுப்பறையில் தரையில் அமரவைத்து பாடம் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அதனால் ஆசிரியா்கள் கற்பிப்பது மாணவிகள் அனைவருக்கும் புரிந்து கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது.
தமிழ் பாடத்துக்கு 1, ஆங்கிலம் 2, புவியியல் 3, வேதியியல் 2, உயிரியல் 1, விலங்கியல் 1, கணிதம் 1, வரலாறு 1, வணிகவியல் 2, பொருளியல் 1 ஆக மொத்தம் 15 ஆசிரியா்கள் கற்பித்து வருகின்றனா். கணக்கு பதிவியலுக்கு ஆசிரியா் இல்லாததால், பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் ஆசிரியா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
அரசுப் பள்ளியில் ஏழை, எளிய மாணவிகள் பயின்று வரும் நிலையில், அவா்களின் கல்வி நலன் கருதி, போதிய ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...