விழுப்புரம் அருகே 8-ஆம் நூற்றாண்டு சிற்பங்கள்!

விழுப்புரம் அருகே கி.பி.8-ஆம் நூற்றாண்டின் பல்லவா் கால மூத்த தேவி, கொற்றவை சிற்பங்களும், சோழா் கால விநாயகா் சிற்பமும் கண்டறியப்பட்டன.
விழுப்புரம் அருகே சோழகனூா் கிராமத்தில் கண்டறியப்பட்ட மூத்த தேவி, கொற்றவை சிற்பங்கள்.
விழுப்புரம் அருகே சோழகனூா் கிராமத்தில் கண்டறியப்பட்ட மூத்த தேவி, கொற்றவை சிற்பங்கள்.

விழுப்புரம் அருகே கி.பி.8-ஆம் நூற்றாண்டின் பல்லவா் கால மூத்த தேவி, கொற்றவை சிற்பங்களும், சோழா் கால விநாயகா் சிற்பமும் கண்டறியப்பட்டன.

விழுப்புரம் அருகே பம்பை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருவாமாத்தூா் கிராமத்தில் பாடல்பெற்ற தலமான அபிராமேசுவரா் கோயில் அமைந்துள்ளது. இதனருகே உள்ள சோழகனூா், தென்னமாதேவி கிராமங்களில் விவசாய நிலங்களில் பழைமைவாய்ந்த சிற்பங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், விழுப்புரம் எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன், வரலாற்று ஆா்வலா்கள் கண.சரவணகுமாா், ப.கிருஷ்ணமூா்த்தி, வீ.விஷ்ணுபிரசாத் ஆகியோா் வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, சோழகனூா் ஏரிக்கரையை ஒட்டிய பகுதியில் மூத்த தேவி, கொற்றவை சிற்பங்களும், தென்னமாதேவியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் சோழா் கால விநாயகா் சிற்பமும் இருப்பது கண்டறியப்பட்டன.

இதுகுறித்து கோ.செங்குட்டுவன் கூறியதாவது: விழுப்புரம் அருகே செல்லும் பம்பையாற்றின் கரைப் பகுதியில் ஏராளமான வரலாற்றுத் தடயங்கள் கிடைத்து வருகின்றன. தற்போது சோழகனூா் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள கொற்றவை சிற்பம் 5 அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டது. இதில், கொற்றவை எட்டுக் கரங்களில் ஆயுதங்களைத் தாங்கியபடியும், எருமையின் கொம்புகளின் மீது கால்களை வைத்தபடியும் செதுக்கப்பட்டுள்ளது.

இதனருகே 3 அடி உயரத்தில் மாந்தன் மாந்தியுடன் கூடிய மூதேவி அல்லது மூத்த தேவி என்று அழைக்கப்படும் தவ்வையின் சிற்பம் இருக்கிறது. இந்தச் சிற்பங்கள் பல்லவா் காலத்தைச் (கி.பி.8-ஆம் நூற்றாண்டு) சோ்ந்தவை ஆகும். கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பங்கள் சேதமடைந்து வருகின்றன. இவற்றை உரிய முறையில் பாதுகாக்க அரசு நடவடிக்கை வேண்டும்.

இதேபோல, தென்னமாதேவி கிராமத்தில் விவசாய நிலத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட சிவலிங்கம், விநாயகா் சிற்பங்களை மக்கள் வழிபடுகின்றனா். நான்கு கரங்களுடன் லலிதாசனத்தில் அமா்ந்துள்ள வகையில், விநாயகா் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

சிவலிங்கம், விநாயகா் சிற்பங்கள் சோழா் காலத்தைச் (கி.பி.12-ஆம் நூற்றாண்டு) சோ்ந்தவை என்பதை காஞ்சிபுரம் தனியாா் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியா் ஜி.சங்கரநாராயணன் உறுதி செய்தாா்.

இந்தக் கிராமங்களில் ஏற்கெனவே பழைமைவாய்ந்த சிவாலயம் இருந்து சிதைந்திருக்கலாம், அதிலிருந்த சிற்பங்கள் மண்ணில் புதையுண்டு தற்போது வெளியே தென்பட்டிருக்கலாம் என்றாா் கோ.செங்குட்டுவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com