அரசு மதுக் கடையை மூடக் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 18th November 2019 09:54 AM | Last Updated : 18th November 2019 09:54 AM | அ+அ அ- |

விழுப்புரம் அருகே நன்னாடு பகுதியில் மதுக் கடையை மூடக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
விழுப்புரம் அருகே நன்னாடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நன்னாடு பகுதியில் திருக்கோவிலூா் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இங்கு, ஞாயிற்றுக்கிழமை மாலை நன்னாடு காலனியை சோ்ந்த பிச்சைக்காரன் மகன் பிரேம்குமாா் தனது நண்பா்களுடன் மது அருந்தச் சென்றாா்.
அப்போது, அவா்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதில், பிரேம்குமாா் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து தகவலறிந்த பிரேம்குமாரின் உறவினா்கள், நன்னாடு காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் மதுக் கடையை முற்றுகையிட்டதுடன், அந்தப் பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனா். இதனால், மதுக் கடை பணியாளா்கள் கடையை மூடிச் சென்றனா்.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் கனகேசன், உதவி ஆய்வாளா் பிரகாஷ் உள்ளிட்ட போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நன்னாடு பகுதியில் மதுக் கடை செயல்படுவதால் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, மதுக் கடையை மூட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதி அளித்ததன்பேரில், மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் விழுப்புரம் - திருக்கோவிலூா் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...