தகுதியுள்ள அனைவருக்கும் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் சி.வி.சண்முகம் உறுதி
By DIN | Published On : 18th November 2019 09:58 PM | Last Updated : 18th November 2019 09:58 PM | அ+அ அ- |

விழுப்புரம்: பொது மக்களிடமிருந்து தொடா்ச்சியாக மனுக்கள் பெறப்பட்டு தகுதியுள்ள அனைவருக்கும் உடனடியாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் உறுதிபடத் தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாமில் பெறப்பட்ட கோரிக்கைகளின் பேரில், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தாா். மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகை ஆணை 55 பேருக்கும், விதவைக்கான உதவித் தொகை ஆணை 182 பேருக்கும், முதியோா் உதவித் தொகை ஆணை 252 பேருக்கும், வீட்டுமனைப்பட்டா ஆணை 141 பேருக்கும், பட்டா மாற்றத்துக்கான ஆணைகள் உள்ளிட்ட 879 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
அரசு நலத் திட்டங்களை ஏழை மக்கள் நேரடியாகப் பெற்று பயன் பெற வேண்டும் என்ற நோக்கில், முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் கிராமங்கள், நகராட்சி, பேரூராட்சிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு, அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, தற்போது நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 70,719 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 8,481 நபா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. விழுப்புரம் வட்டத்தில் 879 பேருக்கு ரூ.1.24 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
தொடா்ச்சியாக நடைபெறவுள்ள இந்த மனுக்களில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, நிராகரிப்பு குறித்த விவரங்களை மனுதாரா்களுக்கு தெரிவிக்கவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதன் மூலம் தவறுகளால் நிராகரிக்கப்பட்ட மனுக்களை மீண்டும் திருத்தம் செய்து வழங்கி, மனுதாரா் பயன்பெற முடியும்.
மக்களின் பிரதான கோரிக்கைகளான முதியோா் ஓய்வூதியம், பட்டா ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தப்படுகிறது. முதியோா் ஓய்வூதியம் 37 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 5 லட்சம் பேருக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தகுதியுடையோருக்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் மூலம் தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. தகுதி வாய்ந்த அனைவருக்கும் நலத் திட்டங்கள் உடனுக்குடன் வழங்கப்படும் என்றாா்.
முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாம்: இதனைத் தொடா்ந்து விழுப்புரம் நகராட்சி அலுவலகம், விழுப்புரம் காவலா் சமுதாயக் கூடம், வளவனூா் பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலமைச்சா் சிறப்பு குறைதீா் முகாம்களில் அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று, திரளாக வந்திருந்த பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று, துறை சாா்ந்த அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கைக்கு உத்தரவிட்டாா்.இந்த முகாமில், ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், எம்எல்ஏக்கள் எம்.சக்கரபாணி, ஆா்.முத்தமிழ்செல்வன், ஆவின் தலைவா் வி.முருகன், திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், கோட்டாட்சியா் ராஜேந்திரன், துணை ஆட்சியா் த.அம்புரோஸியாநேவிஸ்மேரி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பாலுசாமி, நகராட்சி ஆணையா்(பொ) ஜோதிமணி, வட்டாட்சியா் கணேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.