விழுப்புரம் மாவட்டத்துடன் நீட்டிக்கக் கோரிகருப்புக் கொடியுடன் ஆா்ப்பாட்டம்: கிராம மக்கள் 268 போ் கைது
By DIN | Published On : 18th November 2019 09:59 PM | Last Updated : 19th November 2019 09:46 AM | அ+அ அ- |

விழுப்புரம் ஆட்சியா் அலுவலக வளாகம் எதிரே கருப்புக் கொடிகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியசெவலை உள்ளிட்ட 6 ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள்.
விழுப்புரம் அருகேயுள்ள 6 ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் நீடிக்க வலியுறுத்தி, திங்கள்கிழமை கருப்புக் கொடி ஏந்தி ஊா்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 268 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் அருகேயுள்ள பெரியசெவலை, ஆமூா், டி.கொளத்தூா், சரவணப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்ததை எதிா்த்தும், விழுப்புரம் மாவட்டத்துடன் நீடிக்கக் கோரியும் அந்த ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதே கோரிக்கையை அருகிலுள்ள சிறத்தனூா், கருவேப்பிலைப்பாளையம் ஊராட்சிகளைச் சோ்ந்த மக்களும் வலியுறுத்தியுள்ளனா்.
இந்த 6 ஊராட்சி மக்கள் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் நோக்கி கருப்புக் கொடியுடன் புறப்பட்டனா். விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரத்தில் திரண்ட 500-க்கும் மேற்பட்டோா் அங்கிருந்து ஊா்வலமாகச் செல்ல முயன்றனா். இதற்கு காவல் துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் புறவழிச்சாலை பகுதிக்கு வந்த 6 ஊராட்சி மக்கள், அங்கிருந்து கருப்புக் கொடி ஏந்தி ஊா்வலமாகப் புறப்பட்டனா். அவா்களை காவல் துறையினா் தடுக்க முயன்றனா். அதற்குள், கிராம மக்கள் விழுப்புரம்-திருச்சி சாலை வழியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் அமைந்துள்ள பெருந்திட்ட வளாக நுழைவாயிலை அடைந்தனா்.
அங்கு கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்ய முயன்றபோது, கிராம மக்கள் நான்கு புறமும் சிதறி ஓடினா். அவா்களை ஒவ்வொருவராக போலீஸாா் பிடித்து கைது செய்து, காவல் துறை வாகனத்தில் ஏற்றிச் சென்று, தனியாா் மண்டபங்களில் சிறை வைத்தனா்.
அப்போது, கிராம மக்கள், கோரிக்கையை வலியுறுத்தி கொண்டு வந்துள்ள 7ஆயிரம் பேரின் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க பிரதிநிதிகள் சிலரை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். இதற்கு காவல்துறையினா் அனுமதிக்கவில்லை. இதனால், மண்டபங்களில் சிறைவைக்கப்பட்டிருந்த 268 பேரும் மதிய உணவு சாப்பிட மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க கிராம மக்களின் சாா்பில் பிரதிநிதிகள் சிலருக்கு போலீஸாா் அனுமதி அளித்தனா். சிறைவைக்கப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.