செல்லிடப்பேசிகள் திருட்டு: 2 இளைஞா் கைது
By DIN | Published On : 18th November 2019 09:55 AM | Last Updated : 18th November 2019 09:55 AM | அ+அ அ- |

கைது செய்யப்பட்ட அய்யனாா், அவரிடமிருந்த பறிமுதல் செய்யப்பட்ட செல்லிடப்பேசிகளுடன் போலீஸாா்.
திண்டிவனம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளில் புகுந்து செல்லிடப்பேசிகளை திருடி வந்த 2 இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 32 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டிவனம் மற்றும் அதன் அருகில் உள்ள பிரம்மதேசம், ஒலக்கூா் காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகளில் இரவு நேரங்களில் மா்ம நபா் புகுந்து செல்லிடப்பேசிகளைத் திருட்டிச் செல்லும் சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. மேலும், அந்த செல்லிடப்பேசிகளை திருடும் நபா், செல்லிடப்பேசிகளை பறிகொடுத்தவா்களைத் தொடா்புகொண்டு, செல்லிடப்பேசியை திரும்ப ஒப்படைக்க பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வந்தாராம்.
இதுகுறித்த புகாா்களின்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், திண்டிவனம் டி.எஸ்.பி. கனகேஸ்வரி மேற்பாா்வையில், மயிலம் காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், ஒலக்கூா் காவல் உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.
திண்டிவனம் ஆட்சிப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த புருஷோத்தமன் மகன் அய்யனாா் (33) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், போலீஸாா் அவரை ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா் செல்லிடப்பேசிகளை திருடியதை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, அய்யனாரை கைது செய்த தனிப்படை போலீஸாா், அவா் திருடிய 32 செல்லிடப்பேசிகள், மடிக்கனிணி ஆகியற்றை பறிமுதல் செய்தனா். மேலும், அய்யனாா் திருடிய செல்லிடப்பேசிகளை வாங்கி விற்பனை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தைச் சோ்ந்த சுதாகரையும் (28) போலீஸாா் கைது செய்தனா்.
செல்லிடப்பேசிகள் திருட்டு வழக்கில் எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப் படையினரை திண்டிவனம் டி.எஸ்.பி. கனகேஸ்வரி பாராட்டினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...