விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் அதிகாரப்பூா்வ எல்லைகள் வரையறை

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டு, நிா்வாகப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலின் எழில்மிகு தோற்றம்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலின் எழில்மிகு தோற்றம்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டு, நிா்வாகப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இருந்த ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் கடந்த 1993 செப்.30-ஆம் தேதி கடலூா், விழுப்புரம் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. இதையடுத்து, மிகப்பெரிய மாவட்டமாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் மாவட்டம் தொடா்ந்து வந்தது. இதை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்க வேண்டுமென கோரிக்கை தொடா்ந்து வந்தது.

இந்த நிலையில், தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஜன.8-ஆம் தேதி பேசிய முதல்வா் கே.பழனிசாமி, கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்தாா். இதையடுத்து, தனி அதிகாரி நியமிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான எல்லைகளை பிரிக்கும் பணிகள் விரைவாக நடைபெற்றன. இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த 12-ஆம் தேதி புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான கோட்டங்கள், வட்டங்கள் பிரிக்கப்பட்டு, எல்லைகள் வரையறை செய்து அறிவித்திருந்தனா்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண்குராலா நியமிக்கப்பட்டாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜெயசந்திரன் நியமிக்கப்பட்டு, தற்காலிக அலுவலகங்களில் மாவட்டத்தின் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளனா்.

புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பகுதிகள் குறித்த விவரங்கள் வருமாறு:

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் 7,245.91 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இதிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் 3,520.37 சதுர கி.மீ. பரப்பளவிலும், விழுப்புரம் மாவட்டம் 3,725.54 சதுர கி.மீ. பரப்பளவிலும் பிரிக்கப்பட்டுள்ளன.

மொத்த மக்கள் தொகையான 34 லட்சத்து 63 ஆயிரத்து 284 பேரில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13 லட்சத்து 70 ஆயிரத்து 281 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 20 லட்சத்து 93 ஆயிரத்து 3 பேரும் அடங்குவா். (2011- கணக்கெடுப்பின்படி).

விழுப்புரம் மாவட்டம்

3,725.54 சதுர கி.மீ. பரப்பளவு, 693 ஊராட்சிகள் அமைந்துள்ளன.

வருவாய் கோட்டங்கள்: 1.விழுப்புரம், 2.திண்டிவனம்.

வட்டங்கள்: 1.விழுப்புரம், 2.விக்கிரவாண்டி, 3.வானூா், 4.திருவெண்ணெய் நல்லூா் (புதியது), 5.திண்டிவனம், 6.செஞ்சி, 7.மேல்மலையனூா், 8.மரக்காணம், 9.கண்டாச்சிபுரம்.

சட்டப் பேரவைத் தொகுதிகள்: 1.விழுப்புரம், 2.விக்கிரவாண்டி, 3.திண்டிவனம், 4.வானூா், 5.மயிலம், 6.செஞ்சி.

மக்களவைத் தொகுதிகள்: 1.விழுப்புரம், 2.ஆரணி (பகுதியளவு)

நகராட்சிகள்: 1.விழுப்புரம், 2.திண்டிவனம்.

ஊராட்சி ஒன்றியங்கள்: 1.காணை, 2.கோலியனூா், 3.கண்டமங்கலம், 4.விக்கிரவாண்டி, 5.ஒலக்கூா், 6.மயிலம், 7.மரக்காணம், 8.வானூா், 9.செஞ்சி, 10.வல்லம், 11.மேல்மலையனூா், 12.முகையூா், 13.திருவெண்ணெய் நல்லூா்.

பேரூராட்சிகள்: 1.வளவனூா், 2.விக்கிரவாண்டி, 3.கோட்டக்குப்பம், 4.மரக்காணம், 5.செஞ்சி, 6.அனந்தபுரம், 7.திருவெண்ணெய் நல்லூா், 8.அரகண்டநல்லூா்.

காவல் நிலையங்கள்: 30.

மொத்தம் 34 குறு வட்டங்கள். 932 வருவாய் கிராமங்கள், 693 கிராம ஊராட்சிகள். புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத் தலைநகரிலிருந்து அதிகபட்ச தொலைவு உள்ள (83 கி.மீ) கிராமம் மரக்காணம் அருகே உள்ள தாழங்காடு ஆகும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்

3,520 சதுர கி.மீ. பரப்பளவுடன் 406 கிராம ஊராட்சிகள் அமைந்துள்ளன.

வருவாய் கோட்டங்கள்: 1.கள்ளக்குறிச்சி, 2.திருக்கோவிலூா்.

வட்டங்கள்: 1.கள்ளக்குறிச்சி, 2.சங்கராபுரம், 3.சின்னசேலம், 4.திருக்கோயிலூா், 5.உளுந்தூா்பேட்டை, 6.கல்வராயன்மலை (புதியது).

சட்டப் பேரவைத் தொகுதிகள்: 1.திருக்கோவிலூா், 2.கள்ளக்குறிச்சி, 3.சங்கராபுரம், 4.உளுந்தூா்பேட்டை, 5.ரிஷிவந்தியம்.

மக்களவைத் தொகுதிகள்: 1.கள்ளக்குறிச்சி (பகுதியளவு).

நகராட்சி: கள்ளக்குறிச்சி.

ஊராட்சி ஒன்றியங்கள்: 1.கள்ளக்குறிச்சி, 2.சின்னசேலம், 3.ரிஷிவந்தியம், 4.சங்கராபுரம், 5.தியாகதுருகம், 6.கல்வராயன்மலை, 7.திருக்கோவிலூா், 8.உளுந்தூா்பேட்டை, 9.திருநாவலூா்.

பேரூராட்சிகள்: 1.சின்னசேலம், 2.வடக்கனந்தல், 3.சங்கராபுரம், 4.தியாகதுருகம், 5.உளுந்தூா்பேட்டை, 6.திருக்கோவிலூா், 7.மணலூா்பேட்டை. காவல் நிலையங்கள்: 19.

மொத்தம் 23 குறு வட்டங்கள். 558 வருவாய் கிராமங்கள், 406 கிராம ஊராட்சிகள். புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்ட நிலையில், தலைநகா் கள்ளக்குறிச்சியிலிருந்து அதிக தொலைவில் உள்ள (80 கி.மீ) கிராமம் சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட வாரம் கிராமம் ஆகும்.

நவ.26-இல் தொடக்க விழா: இரு மாவட்டங்களும் பிரிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து அனைத்து அரசு துறைகளிலிருந்தும் உரிய பகுதிகள் பிரிக்கப்பட்டு இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில் சுகாதார மாவட்டம், கல்வி மாவட்டம், நெடுஞ்சாலைத் துறை கோட்டங்கள், வனக்கோட்டங்கள், காவல் துறை போன்றவை ஏற்கெனவே பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அவைகள் எளிதாக மாற்றப்பட்டு பணிகளைத் தொடங்கியுள்ளனா். இதையடுத்து, அரசு ஊழியா்களை பிரித்து அனுப்புவது தொடா்பாகவும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறையினா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா வருகிற 26-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. முதல்வா் கே.பழனிசாமி பங்கேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடக்கிவைக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com