திண்டிவனம் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.9 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 09th October 2019 10:35 AM | Last Updated : 09th October 2019 10:35 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.9 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், திண்டிவனத்தை அடுத்த கல்லூரி சாலை கூட்டுச் சாலையில், வேளாண் உதவி இயக்குநர் சரவணன் தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர் தேவேந்திரன் உள்ளிட்ட போலீஸார் அடங்கிய திண்டிவனம் சட்டப்பேரவை தொகுதிக்கான பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை நோக்கி வந்த ஒரு சொகுசு காரை மடக்கி சோதனையிட்டனர். அந்த காரில் ரூ.9 லட்சத்து 18 ஆயிரம் ரொக்கம் இருந்தது.
இது தொடர்பாக, காரில் வந்த திண்டிவனம் அருகேயுள்ள தொள்ளார் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மகன் புண்ணியமூர்த்தி (46), கார் ஓட்டுநர் சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (25) ஆகியோரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அதில், லாரி வாங்குவதற்காக பணத்துடன் சிதம்பரத்துக்கு சென்றதாகவும், எதிர்பார்த்த லாரி கிடைக்காததால், பணத்துடன் திரும்பி வீட்டுக்குச் செல்வதாகவும் தெரிவித்தனராம். இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, திண்டிவனம் வட்டாட்சியர் ரகோத்தமனிடம் ஒப்படைத்தனர். அந்தப் பணம் திண்டிவனம் சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.