ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற கஞ்சிக் கலய ஊர்வலம்
By DIN | Published On : 11th September 2019 09:18 AM | Last Updated : 11th September 2019 09:18 AM | அ+அ அ- |

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை பெத்தான் குளக்கரையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், ஆடிப்பூர கஞ்சிக் கலய விழா, பங்காரு அடிகளாரின் 79-ஆவது பிறந்த நாள் விழா, வழிபாட்டு மன்ற ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காலை 6 மணிக்கு கொடியேற்றம், 7 மணிக்கு சிறப்பு அர்ச்சனை, காலை 11 மணிக்கு அன்னை ஆதிபராசக்தி, பங்காரு அடிகளார் உருவப் படங்களுடன் கஞ்சிக் கலய ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் செவ்வாடை அணிந்து கஞ்சிக் கலயம், தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக எடுத்துச்சென்றனர்.
முன்னதாக, ஊர்வலத்தை செஞ்சி எம்எல்ஏ. மஸ்தான் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். ஊர்வலம் அங்காடி வீதி வழியாக வந்து, வழிபாட்டு மன்றத்தை அடைந்தது. அனைவருக்கும் கஞ்சி பிரசாதமாக வழங்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை அவலூர்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர், விழுப்புரம் மாவட்ட தலைமை மன்றத்தினர் செய்திருந்தனர்.