கள்ளக்குறிச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 11th September 2019 09:16 AM | Last Updated : 11th September 2019 09:16 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயில் வீதியில் இருந்த தனியார் கட்டட ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
கள்ளக்குறிச்சியில், துருகம் சாலையையொட்டி பழைய மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள மாரியம்மன் கோயில் எதிரே தனியார் வணிக வளாகக் கட்டடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இதனை அகற்ற வேண்டுமென கோயில் நிர்வாகம் தரப்பில் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வந்தது.
இது தொடர்பாக, கோயில் நிர்வாகி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அண்மையில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், செவ்வாய்க்
கிழமை பழைய மாரியம்மன் கோயில் வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டன. கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் சையத்முஸ்தபா கமால், நகரமைப்பு அலுவலர் தாமரைச்செல்வன், வட்டாட்சியர் பொறுப்பு கமலம் உள்ளிட்டோர் முன்னிலையில், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புடன், பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.