மாற்றுத் திறனாளிகள் 67 பேருக்கு உதவித் தொகை பெற ஆணை
By DIN | Published On : 11th September 2019 09:20 AM | Last Updated : 11th September 2019 09:20 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான வயது தளர்வு சிறப்பு முகாமில் 67 பேருக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி ஆகிய வட்டங்களில் உள்ள 18 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, வயது தளர்வு சிறப்பு முகாம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.
முகாமில், 18 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகள் 221 பேர், வயது தளர்வு செய்து உதவித்தொகை
வழங்கக் கோரி மனு அளித்தனர். இதில், தகுதியான 67 நபர்கள் மருத்துவ குழுவினர் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு மாவட்ட ஆட்சியரால், வயது தளர்வு செய்து, உதவித் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகிருஷ்ணமூர்த்தி, தனித் துணை ஆட்சியர் த. அம்புரோஸியாநேவிஸ்மேரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், சுகாதாரத் துறை துணை இயக்குநர் பாலுசாமி, விழுப்புரம் வட்டாட்சியர் கணேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ஆனந்தன், மருத்துவர்கள் ஆர்.சதாவெங்கடேஷ், எஸ்.சீனிவாசன், ரகுநாத், ஆனிமேரி உள்ளிட்ட அலுவலர்கள், மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
செப்.17-இல் முகாம்: இதேபோல, உளுந்தூர்பேட்டை வட்டத்தில், வயது தளர்வு செய்து மாற்றுத் திறனாளி உதவித்தொகை வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
அதில், 154 நபர்களுக்கு வயது தளர்வு செய்து, ஆணை வழங்கப்படவுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.