அங்கன்வாடி மையத்தை சூழ்ந்த மழை நீர்
By DIN | Published On : 19th September 2019 01:55 AM | Last Updated : 19th September 2019 01:55 AM | அ+அ அ- |

அனந்தபுரம் அருகே அங்கன்வாடி மையத்தைச் சுற்றி மழை நீர் குட்டை போல் தேங்கி நிற்பதால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
விக்கிரவாண்டி வட்டம், காணை ஒன்றியத்தைச் சேர்ந்த பனமலைபேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட உமையாள்புரத்தில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. புதிதாக கட்டி திறக்கப்பட்ட இந்த மைய கட்டடத்தில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
தற்போது பெய்த மழை காரணமாக அங்கன்வாடி மையத்தை மழைநீர் சூழ்ந்து குட்டை போல காட்சியளிக்கிறது.
நீண்ட நாள்களாக தேங்கியுள்ள தண்ணீரில் பாசிகளும் படர்ந்துள்ளன. கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
அங்கன்வாடி மையத்துக்குச் செல்ல சாலை வசதி இல்லை. மண் பாதையில்தான் செல்லவேண்டும். தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. காலரா, டெங்கு போன்ற கொடிய நோய்கள் பரவும் இந்த நேரத்தில் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், நோய்கள் தாக்கக்கூடும் என அஞ்சி, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். மையத்தை சுற்றிலும் முட்புதர்கள், செடிகள் மண்டிக் கிடக்கிறது.
இதில் விஷ ஜந்துக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.