விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: செல்வாக்கான வேட்பாளர்களை எதிர்பார்க்கும் தொண்டர்கள்!

அதிமுக-திமுக சம பலத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில், செல்வாக்கான வேட்பாளர் தேர்வே அந்தக் கட்சிகளின்

அதிமுக-திமுக சம பலத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில், செல்வாக்கான வேட்பாளர் தேர்வே அந்தக் கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது. இதனால், வேட்பாளர்கள் அறிவிப்பை இரு கட்சிகளின் தொண்டர்களும் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
இதனிடையே, திமுக சார்பில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் பெயரில் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த கு.ராதாமணி மறைவையொட்டி, இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி கடந்த 1952-இல் உருவானது. பிறகு, இந்தத் தொகுதி கண்டமங்கலம் (தனி), ஒரு முறை வளவனூர் தொகுதி என மாறியது. மீண்டும், கடந்த 2008-ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பில், விக்கிரவாண்டி பொது தொகுதியானது.
சம பலத்தில் அதிமுக-திமுக: இந்தத் தொகுதியில், ஒட்டுமொத்தமாக திமுக, அதிமுக கட்சிகள் தலா 6 முறை வெற்றி பெற்று சம பலத்தில் உள்ளன. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சியின் வேட்பாளர்தான் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று வந்துள்ளார். மாறாக, கடந்த தேர்தலில் மட்டுமே அதிமுக ஆட்சியைப் பிடித்த நிலையில், திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
பதவிக்காலம் இரண்டாண்டுக்கும் குறைவாகவே இருந்தாலும், இந்தத் தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற ஆக வேண்டுமென அதிமுக-திமுக ஆகிய இரு கட்சிகளுமே தீவிரம் காட்டி வருகிறது.
அதிமுக முனைப்பு: அதிமுக ஆளும் கட்சியாக இருந்தும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 4-இல் மட்டுமே வெற்றி பெற்றது. 
எஞ்சிய 7 தொகுதிகளிலும் திமுக வாகை சூடியது. ஆகவே, அதில் ஒரு தொகுதியை இந்த இடைத் தேர்தல் மூலம் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பு அதிமுகவினரிடம் காணப்படுகிறது.
இதற்காக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலரான அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் கடந்த ஒரு மாத காலமாக, இந்தத் தொகுதியில் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தேர்தல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இடையே, அரசு விழாக்களை நடத்தி ரூ.50 கோடி மதிப்பில் நலத் திட்டங்களையும் வழங்கியுள்ளனர்.
தக்கவைக்க திமுக தீவிரம்:திமுக தரப்பினரோ, இந்தத் தொகுதியை தக்கவைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தக் கட்சியினர் மத்திய மாவட்டச் செயலரான முன்னாள் அமைச்சர் க.பொன்முடி தலைமையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே ஒன்றியங்கள் வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை என்ற பெயரில் ஒரு கிராமம் கூட விடாமல் க.பொன்முடியே நேரில் சென்று கட்சியினரை திரட்டி தேர்தல் பணியை முடுக்கிவிட்டார்.
வேட்பாளர் தேர்வு முக்கியம்: இந்தத் தொகுதியில் சம பலத்துடன் காணப்படும் இரு கட்சிகளுக்கும் வேட்பாளர் தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தொகுதியில், பெரும்பான்மையாக உள்ளவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, இரு கட்சிகளிலும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக முன்மொழிந்துள்ளனர்.
திமுக தரப்பில், கட்சியின் மூத்த நிர்வாகியான மாவட்டப் பொருளாளர் நா.புகழேந்தி, மாவட்ட துணைச் செயலர் ஜெயச்சந்திரன் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
இவர்களுடன்,  முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.சம்பத், முன்னாள் பொதுக் குழு உறுப்பினர் அன்னியூர் சிவா, ஒன்றியச் செயலர்கள் வேம்பி ரவி, ரவிதுரை,  ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன்,  பாபுஜீவானந்தம் ஆகியோரும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சித் தலைமையிடம் மனு அளித்துள்ளனர்.
உதயநிதிக்கு எம்.பி. விருப்ப மனு: இதனிடையே,  திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டி, க.பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான கௌதமசிகாமணி திங்கள்கிழமை விருப்ப மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பிரபலங்கள்: அதிமுக தரப்பில், காணை ஒன்றியச் செயலர் முத்தமிழ்ச்செல்வன், பொதுக் குழு உறுப்பினர் பன்னீர், ஒன்றியச் செயலர்கள் வேலு, ரவிவர்மன், தொரவி சுப்பிரமணி ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. 
அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெயர்களிலும் விருப்ப மனு கட்சித் தலைமையிடம் அளிக்கப்பட்டுள்ளன. முன்னாள் எம்.பி. இரா.லட்சுமணனும் நேர்காணலில் பங்கேற்றார்.
செல்வாக்கு வாய்ந்த வேட்பாளர்களையே இரு கட்சி தொண்டர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com