செல்லிடப்பேசிகள் திருட்டு வழக்கில் இரு இளைஞர்கள் கைது
By DIN | Published On : 29th September 2019 03:15 AM | Last Updated : 29th September 2019 03:15 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் செல்லிடப்பேசிகள் திருட்டில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 22 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரத்தில் செல்லிடப்பேசிகள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து, நகர காவல் ஆய்வாளர் ராபின்சன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் பரணிதரன், பாஸ்கரன், குற்றப் பிரிவு சிறப்புப் படை உதவி ஆய்வாளர் பாண்டியன் மற்றும் மணிமாறன், பாலமுருகன், ராஜசேகரன், குமரகுருபரன், ரஞ்சித் உள்ளிட்ட போலீஸார் கொண்ட தனிப் படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் சிலர் குறைந்த விலைக்கு செல்லிடப்
பேசிகளை விற்பதாக வந்த தகவலை அடுத்து, தனிப்படை போலீஸார் சனிக்கிழமை மாலை அங்கு சென்று ரகசியமாக விசாரித்தனர்.
அப்போது, இருவர் செல்லிடப்பேசிகளை திருடி வந்து விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் ரகசியமாக கண்காணித்து பிடித்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, விழுப்புரம் முத்தோப்பு பகுதி சண்முகம் மகன் பிரசன்னா(20), கீழ்ப்பெரும்பாக்கம் முகமதியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த குமார் மகன் தமிழரசன் (22) என்பதும், இவர்கள் விழுப்புரம் நகரப் பகுதிகளில் கூட்டம் நிறைந்த இடங்களில் பொது மக்களிடம் இருந்து செல்லிடப்பேசிகளை திருடியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 22 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். இவர்கள், விழுப்புரம், புதுவை உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகளில் சென்று 40-க்கும் மேற்பட்ட செல்லிடப்பேசிகளை திருடியது தெரிய வந்தது. இவர்கள் மீது ஏற்கெனவே திருட்டு வழக்குகள் உள்ளன. விழுப்புரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.