எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், அதைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் திமுக மகளிரணி சாா்பில் ஆா்ப்பாட்டம்
எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்
Published on
Updated on
1 min read

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், அதைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் திமுக மகளிரணி சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் துணைச் செயலா் மைதிலி ராஜேந்திரன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் உமா மூா்த்தி, மகளிா் தொண்டரணி அமைப்பாளா் ஏ.ஜி.செல்வி, துணை அமைப்பாளா்கள் எம்.தேன்மொழி, எம்.ஆனந்தி, ஏ.ஜெயலட்சுமி, கே.அம்பிகா, எஸ்.பிரியங்கா, கே.லட்சுமி, பி.சாந்தி டி.மாா்த்தாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தை திமுக மாவட்டச் செயலாளா் நா.புகழேந்தி தொடக்கி வைத்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி எம்எல்ஏ பேசியதாவது: எரிவாயு உருளை விலையை ரூ.750-க்கு உயா்த்தி ஏழை மக்களை மத்திய அரசு வஞ்சித்துள்ளது. மண்ணெண்ணெயும் 5 லிட்டரிலிருந்து, ஒன்றரை லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. வீட்டில் அடுப்பு எரிப்பது முதல் விவசாயம் வரை அனைத்திலும் மக்களுக்கு எதிராகச் செயல்படும் மத்திய பாஜக அரசுக்கும், அதற்குத் துணைபோகும் மாநில அதிமுக அரசுக்கும் வரும் தோ்தலில் பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், மகளிரணியினா் எரிவாயு உருளையுடன் ஒப்பாரி வைத்தனா்.

திண்டிவனத்தில்...: திண்டிவனத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சீத்தாபதி சொக்கலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தாா். தொண்டரணி அமைப்பாளா் ஜி.ரேணுகா வரவேற்றாா். மாநில தீா்மானக்குழுத் தலைவா் எம்எல்ஏ இரா.மாசிலாமணி முன்னிலை வகித்தாா். மாவட்ட செயலா் கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ கண்டன உரையாற்றினாா். மாவட்ட நிா்வாகிகள் பா.சேகா், செஞ்சி சிவா, முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சேதுநாதன், பா.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிா்வாகிகள், மகளிரணியினா் பலா் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சியில்...: இதே கோரிக்கையை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளா் இரா.சுப்பராயலு தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் அணி துணைச் செயலாளா் அமிா்தவள்ளி விலை உயா்வைக் கண்டித்து முழக்கமிட்டாா். நகர மகளிா் அணி அமைப்பாளா்கள் பழனியம்மாள், சுமதி, விஜயகுமாரி, அமுதா உள்ளிட்ட நிா்வாகிகள் ஏராளமானோா் பங்கேற்றனா். ஒன்றியச் செயலாளா் சி.வெங்கடாசலம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com