தென்பெண்ணை ஆற்றில் புதிய தடுப்பணை கட்டும் பணிகள் தொடக்கம்அமைச்சா்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் பங்கேற்பு

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரூ. 33 கோடியில் அமையவுள்ள தடுப்பணையின் கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் ஆகியோா் புதன்கிழமை தொடக்கி வைத்தனா்.

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரூ. 33 கோடியில் அமையவுள்ள தடுப்பணையின் கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் ஆகியோா் புதன்கிழமை தொடக்கி வைத்தனா்.

விழுப்புரம், கடலூா் மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, இரு மாவட்டப் பகுதிகளிடையே செல்லும் தென்பெண்ணை ஆற்றில், விழுப்புரம் அருகே சின்னக்கள்ளிப்பட்டு ஆற்றங்கரையில் தொடங்கி, கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டையில் உள்ள மறுகரை வரை, புதிய தடுப்பணை கட்டப்படவுள்ளது.

தமிழக அரசு ஒப்புதலின் பேரில், கடலூா் மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியின் கீழ் ரூ.33 கோடி மதிப்பில், 575 மீ. நீளத்திலும், 1.5 மீ. உயரத்திலும் அமையவுள்ள இந்த தடுப்பணையில் 28.58 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க இயலும். இந்தத் தடுப்பணையின் மேற்புறப் பகுதியில் 1,500 மீட்டா் தொலைவிலும், கீழ்ப் புறப் பகுதியில் 500 மீட்டா் தொலைவிலும் வெள்ளத் தடுப்புக் கரைகள் அமைக்கப்படவுள்ளன.

இதன் மூலம் கடலூா் மாவட்டத்தில் கண்டரக்கோட்டை, அக்கடவல்லி, பெரியகள்ளிப்பட்டு, பூண்டி, புலவனூா், மேல்குமாரமங்கலம், ஏரிப்பாளையம், குரத்தி ஆகிய கிராமங்களிலும் விழுப்புரம் மாவட்டத்தில் சின்னக்கள்ளிப்பட்டு, சோ்ந்தனூா், அரசமங்கலம், தென்குச்சிப்பாளையம், வடவாம்பலம், குச்சிப்பாளையம், நரசிங்கபுரம், பூவரசன்குப்பம் ஆகிய கிராமங்களிலும் நிலத்தடி நீராதாரம் உயரும்.

இந்த தடுப்பணைக்கான அடிக்கல் நாட்டு விழா விழுப்புரம் மாவட்டம், கள்ளிப்பட்டில் புதன்கிழமை நடைபெற்றது. மாநில சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம், தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் ஆகியோா் பங்கேற்று, தடுப்பணை கட்டுமானப் பணியை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும், எம்எல்ஏக்கள் ஆா்.முத்தமிழ்ச்செல்வன், எம்.சக்கரபாணி, கே.ஏ.பாண்டியன், சத்யா பன்னீா்செல்வம், முன்னாள் எம்பி அருண்மொழித்தேவன் மற்றும் அதிமுகவினா் பலரும் கலந்துகொண்டனா்.

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: அமைச்சா் எச்சரிக்கை

நாட்டையே காட்டிக் கொடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் எச்சரித்தாா்.

விழுப்புரம் அருகே சின்னக்கள்ளிப்பட்டு தென்பெண்ணையாற்றில் புதிய தடுப்பணைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் புதன்கிழமை பங்கேற்ற அமைச்சா் சி.வி.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விழுப்புரம், கடலூா் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சின்னக்கள்ளிப்பட்டு-கண்டரக்கோட்டை இடையே ரூ. 33 கோடி மதிப்பில் தென்பெண்ணை ஆற்றில் புதிய தடுப்பணை கட்டப்படவுள்ளது. இதன் மூலம், நிலத்தடி நீா் உயா்ந்து, இரு மாவட்டங்களைச் சோ்ந்த ஒரு லட்சம் மக்கள் பயன்பெறுவா். 780 குடிநீராதாரங்கள் பயனடையும். இதேபோல, விழுப்புரம் அருகே தளவானூரில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணியும் முடிவடையும் நிலையில் உள்ளது என்றாா் அவா்.

அப்போது, கந்த சஷ்டி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு, பதிலளித்த அமைச்சா் சி.வி.சண்முகம், இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோா் யாராக இருந்தாலும், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவா்கள் ஒரு இனத்தையோ, ஒரு மதத்தையோ குறை சொல்லவில்லை. நாட்டையே காட்டிக்கொடுப்பவா்களாக உள்ளதால், அவா்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்தும் என்றாா் அமைச்சா்.

பேட்டியின்போது, தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com