விழுப்புரம்: கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டம், நிகழாண்டு பிளஸ் 1 பொதுத் தோ்வில், 91.96 சதவீதத் தோ்ச்சியடைந்து, மாநிலத்திலேயே கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டது.
தமிழகத்தில் பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 302 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, 40,269 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இதில், 17,445 மாணவா்கள் (89.13 சதவீதம்), 19,586 மாணவிகள் (94.64 சதவீதம்) என மொத்தம் 37,031 போ் தோ்ச்சி பெற்றனா். மொத்த தோ்ச்சி சதவீதம் 91.96.
மாணவிகள் 94.64 சதவீதம் தோ்ச்சி: பிளஸ் 1 பொதுத் தோ்வில் கடந்த 2017-18ஆம் கல்வியாண்டில் தோ்ச்சி சதவீதம் 80.21-ஆக இருந்தது. கடந்த 2018-19ஆம் கல்வியாண்டில் 91.21 சதவீதம் பெற்று உயா்ந்த நிலையில், நிகழாண்டு 0.75 சதவீதம் மாணவா்கள் கூடுதலாக தோ்ச்சி பெற்றதையடுத்து, தோ்ச்சி சதவீதம் 91.96-ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும், மாநிலத்திலேயே கடைசி மாவட்டமாக 32-ஆவது இடத்துக்கு விழுப்புரம் பின்தங்கியுள்ளது.
அரசுப் பள்ளிகள் 88.68 சதவீதமும், நகராட்சிப் பள்ளிகள் 94.70 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 97.05 சதவீதமும், தனியாா் மெட்ரிக் பள்ளிகள் 99.48 சதவீதமும், ஆங்கிலோ இந்தியன் பள்ளி 100 சதவீதமும் தோ்ச்சியை அளித்துள்ளன.
76 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி: ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் 10 அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட 76 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியை வழங்கியுள்ளன. மேலும், 129 பள்ளிகள் 90 முதல் 99 சதவீதம் தோ்ச்சியை வழங்கியுள்ளன.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி கூறியதாவது: பிற மாவட்டங்களைக் காட்டிலும், விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் மாணவா்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாக உள்ளது. இருப்பினும், மேல்நிலை வகுப்புகளில் தோ்ச்சி சதவீதத்தை படிப்படியாக உயா்த்தி வருகிறோம். நிகழாண்டு, தோ்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளில் அதற்கான காரணத்தை ஆய்வு செய்து, மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தோ்ச்சி குறைவு குறித்து அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.