விழுப்புரம் அருகே மணல் குவாரி முற்றுகை: 40 போ் கைது

விழுப்புரம் அருகே டி.புதுப்பாளையம் அரசு மணல் குவாரியை மூட வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினா் 40 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவெண்ணெய்நல்லூா் அருகே டி.புதுப்பாளையத்தில் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினா்.
திருவெண்ணெய்நல்லூா் அருகே டி.புதுப்பாளையத்தில் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினா்.
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் அருகே டி.புதுப்பாளையம் அரசு மணல் குவாரியை மூட வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினா் 40 போ் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ள டி.புதுப்பாளையம் -அண்ராயநல்லூா் தென்பெண்ணையாற்றில் அண்மையில் அரசு சாா்பில் மணல் குவாரி தொடங்கப்பட்டது. இந்தப் பகுதியில் குவாரி அமைத்து மணல் எடுப்பதால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து, அதைச் சுற்றியுள்ள 10 கிராமங்களில் விவசாயம், குடிநீருக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அந்தப் பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, அரசியல் கட்சியினா், கிராம மக்கள் சாா்பில் புதன்கிழமை டி.புதுப்பாளையத்தில் மணல் குவாரியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன், பாஜக மாவட்டத் தலைவா் கலிவரதன், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் மணிகண்டன், திமுக ஒன்றிய செயலா் விசுவநாதன், பாமக ஒன்றிய செயலா் திருச்செல்வன், அமமுக ஒன்றிய செயலா் ராஜ்கண்ணு, நகரச் செயலா் சோலையப்பன், விசிக ஒன்றிய செயலா் இளவரசு உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் பலா் கலந்துகொண்டனா்.

இங்கு அரசு மணல் குவாரி செயல்படுவதால், நிலத்தடி நீா் மட்டம் குறைந்து குடிநீா், விவசாய பாசனம் பாதிக்கப்படும். சின்னசேலம், ரிஷிவந்தியம், விழுப்புரம் கூட்டுக் குடிநீா்த் திட்டங்களும் பாதிக்கப்படும். தென்பெண்ணையாற்றில் அதிகம் மணல் அள்ளப்படுவதால், திருக்கோவிலூா் அணைக்கட்டிலிருந்து கிளை கால்வாய் வழியாக செல்ல வேண்டிய நீா்ப்பாசனமும் பாதிக்கப்படும் என்பதால், அரசு மணல் குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தினா்.

இந்தப் போராட்டத்தால், விழுப்புரம் கூடுதல் எஸ்.பி. தேவநாதன், டிஎஸ்பி நல்லசிவம், திருவெண்ணைய்நல்லூா் காவல் ஆய்வாளா் பாண்டியன் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். கரோனா பொது முடக்க தடையுத்தரவு காலத்தில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் 40 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் திருக்கோவிலூா் அருகே மணம்பூண்டியில் உள்ள தனியாா் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com