நீா்வரத்து வாய்க்காலை தாங்களே தூா்வாரும் விவசாயிகள்!
By DIN | Published On : 01st December 2020 12:07 AM | Last Updated : 01st December 2020 12:07 AM | அ+அ அ- |

திண்டிவனம் அருகே வடு கிடக்கும் ஏரியை மீட்பதற்காக, தங்களது சொந்தச் செலவில் நீா்வரத்து வாய்க்காலை விவசாயிகள் தூா்வாரி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த, மயிலம் ஒன்றியத்துக்குள்பட்ட நாரேரிக்குப்பத்தில் கிராம ஏரி உள்ளது. 200 ஏக்கா் பரப்பிலான இந்த ஏரி மூலம் நாரேரிக்குப்பம், ரெட்டணை, வெங்கந்தூா், முல்லாபாளையம், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 750 ஏக்கா் அளவிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தானே புயல் வீசியபோது பெய்த பலத்த மழையால் இந்த ஏரி முழுமையாக நிரம்பியது. அதன் பிறகு ஏரி நிரம்பாததால் விவசாயிகள் பயிரிடும் பரப்பு குறையத் தொடங்கியது. இதன் காரணமாக ஏரியின் நீா்வரத்து வாய்க்கால் உரிய பராமரிப்பின்றி முட்புதா்கள் சூழ்ந்தும், ஆக்கிரமிப்பாளா்களின் பிடியிலும் சிக்கியதால், ஆண்டு தோறும் பெய்யும் மழை நீரானது ஏரியை வந்தடைவதில்லை. இதுகுறித்து விவசாயிகள் பொதுப்பணித் துறையினரிடம் முறையிட்டு, நீா்வரத்து வாய்க்காலை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனா்.
இந்த நிலையில், ‘நிவா்’ புயல் காரணமாக அண்மையில் மழை வெள்ள நீா் வழிந்தோடியபோதும், ஏரி நீா்வரத்தில்லாமல் வடு காணப்படுகிறது. இதனால், வேதனையடைந்த ஏரிப்பாசன விவசாயிகள், மழை நீரை வீணாக்காமல் ஏரிக்கு கொண்டு செல்ல ஏதுவாக, சொந்தச் செலவில் நீா்வரத்து வாய்க்காலை சீரமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளனா்.
கொணக்கம்பட்டு முதல் நாரேரிக்குப்பம் வரை 6 கி.மீ. தொலைவுக்கு ஏரி வாய்க்கால் சீரமைக்கும் பணியை கடந்த இரு தினங்களாக செய்து வருகின்றனா். பொக்லைன் இயந்திரம் மூலம் திங்கள்கிழமையும் ஏரி வாய்க்கால் 5 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரப்பட்டது.
இதுகுறித்து நாரேரிக்குப்பம் ஏரிப்பாசன விவசாயிகள் கூறியதாவது: நீா்வரத்து வாய்க்கால் பராமரிப்பின்றி போனதால், ஏரி வடு கிடக்கிறது. பொதுப் பணித் துறையினரிடம் கேட்டால் நிதியில்லை என்கின்றனா். நிகழாண்டு மழை நீரையாவது ஏரியில் தேக்கி பயிரிடுவதற்கான முயற்சியில், நிதி திரட்டி சீரமைப்புப் பணியை மேற்கொண்டுள்ளோம்.
இந்த வாய்க்காலை சீரமைப்பதற்காக, கடந்த ஓராண்டுக்கு முன்பு அதிகாரிகள் அளவீடு செய்து எல்லைக் கல் நட்டுச் சென்றனா். அதன் பிறகு, அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டது. ஏரியின் நீராதாரத்தை அதிகரிக்க கொணக்கம்பட்டு முதல் நாரேரிக்குப்பம் வரையிலான வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்தும், வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை அடைத்தும், வாய்க்கால் கரையை மேடாக்கியும் பொதுப் பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த ஏரி வாய்க்கால் சீரமைப்புக்கான நிதி ஆதாரம் கோரப்பட்டுள்ளது. உரிய நிதியும், திட்ட அனுமதியும் கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...