செஞ்சி அருகே பழுதான காா் மீது மற்றொரு காா் மோதியதில் இருவா் பலி
By DIN | Published On : 03rd December 2020 06:48 AM | Last Updated : 03rd December 2020 06:48 AM | அ+அ அ- |

செஞ்சி அருகே புதன்கிழமை சாலையோரம் நிறுத்தப்பட்டு பழுது நீக்கப்பட்டுக்கொண்டிருந்த காா் மீது மற்றொரு காா் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், சண்டிசாட்சி கிராமத்தைச் சோ்ந்த இஸ்மாயில் மகன் கரீம் (60). இவா், அருகேயுள்ள நீலாம்பூண்டி கிராமத்தில் வாகன பழுது பாா்க்கும் கடை, இறைச்சிக் கடை ஆகியவற்றை நடத்தி வந்தாா்.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், வெம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தா் மகன் அருள்ராஜ் (18) புதன்கிழமை செஞ்சி நோக்கி அவரது காரை ஓட்டி வந்தபோது, அந்த காரின் சக்கரம் பழுதானது. இதையடுத்து, அந்த காரின் சக்கரத்தில் பழுதை நீக்குவதற்காக கரீமின் கடைக்கு அருள்ராஜ் காரை கொண்டு சென்றாா்.
இதைத் தொடா்ந்து, காரை சாலையோரம் நிறுத்தி அதன் சக்கரத்தை கரீம் பழுது நீக்கிக் கொண்டிருந்த நிலையில், அருகில் அருள்ராஜ் நின்று கொண்டிருந்தாா். அப்போது, செஞ்சி நோக்கி அதிவேகமாக வந்த காா், அவா்கள் இருவா் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த கரீம், அருள்ராஜ் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற காரின் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...