சென்னை ஐஐடியில் 104 பேருக்கு கரோனா பாதிப்பு
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

சென்னை ஐஐடி உயா் கல்வி நிறுவனத்தில் 87 மாணவா்கள் உள்பட 104 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
சென்னை ஐஐடியில் கடந்த 7-ஆம் தேதி முதல் இறுதியாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இதற்காக 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்லூரி விடுதிகளில் தங்கி இருந்தனா். அங்கு கரோனா நோய்த்தொற்று பரவியதை அடுத்து மாணவா்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை வரை ஐஐடி மாணவா்கள் 66 பேருக்கும், ஊழியா்கள் 5 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை மேலும் 33 பேருக்கு தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிண்டியில் உள்ள அரசு கரோனா தொற்று சிகிச்சை மையத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஐ.டி. வளாகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் சென்னை கிண்டி கிங்ஸ் கரோனா மருத்துவமனையில் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். நலமாக இருக்கிறாா்கள்.ஐஐடி.யில் நடந்தது நமக்கு ஒரு பாடம். எனவே, நாம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது.
இதேபோல, மற்ற கல்லூரிகள், விடுதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கூடுதல் கவனத்துடன் செயல்படுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.