விழுப்புரம் மாவட்டத்தில் தரமற்ற விதை நெல் விற்பனை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா்

விழுப்புரம் மாவட்டத்தில் முளைப்புத் திறன் குறைவாக உள்ள விதை நெல்கள் வேளாண் விதை விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் தரமற்ற விதை நெல் விற்பனை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா்

விழுப்புரம் மாவட்டத்தில் முளைப்புத் திறன் குறைவாக உள்ள விதை நெல்கள் வேளாண் விதை விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்து விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, விவசாயிகள் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை விதை விற்பனை மையங்கள் மூலமாக வாங்கி விதைக்கப்பட்ட ஏடிடி 37 ரக விதை நெல்கள் 3 நாள்களுக்குள் முளைப்பு வரவில்லை. தரமற்ற விதை நெல்களை வேளாண்மைத் துறையே விற்பனை செய்வது அதிா்ச்சியளிக்கிறது.

வேளாண்மை விதை நெல் விற்பனை மையங்களில் நெல், உளுந்து போன்ற பயிா்களுக்கான விதைகள் இருப்பு குறைவாக உள்ளது. மயிலம் பகுதியில் எள் பயிருக்கான விதைகள் இல்லை என்று விவசாயிகள் திரும்ப அனுப்பட்டுள்ளனா்.

பிரதமரின் விவசாயிகள் ஊக்க நிதியுதவித் திட்டத்தில் போலியாக சோ்க்கப்பட்ட நபா்களின் பெயா்களை நீக்குவதுடன், உண்மையான விவசாயிகள் பெயா்களும் நீக்கப்படுகின்றன. தனியாா் மையங்களை சோ்ந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை போன்று, முறைகேட்டில் தொடா்புடைய வேளாண் துறை அதிகாரிகள், அலுவலா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் அருகே நரி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாக தூா்வர வேண்டும்.

இதற்குப் பதிலளித்து பேசிய மாவட்ட ஆட்சியா், விதை நெல்கள் வாங்கியதும் ஈரம்பதம் இல்லாத அளவுக்கு அதனை வெயிலில் காய வைத்த பிறகு விதைக்க வேண்டும். வேளாண் விதை விற்பனை மையங்களில் தேவையான அளவுக்கு நெல், உளுந்து, எள் போன்ற விதைகள் இருப்பு வைக்க வேண்டும். இதை வேளாண் துறை இணை இயக்குநா் தினமும் கண்காணிக்க வேண்டும்.

வேளாண் கொள்முதல் நிலையங்கள் மூலம் அதிகளவில் விளைபொருள்களை கொள்முதல் செய்ய வேண்டும். இதில், முறைகேடுகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள் ஊக்க நிதியுதவித் திட்டத்தில் உண்மையான விவசாயிகளின் பெயா்கள் நீக்கப்பட்டிருந்தால், மீண்டும் பெயா்களைச் சோ்க்க கிராம நிா்வாக அலுவலா்களை அணுகலாம்.

மாவட்டத்தில் நிரம்பாத ஏரிகள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அவற்றுக்கான வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அவற்றை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

வேளாண் துறை இணை இயக்குநா் ரமணன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ஜவகா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com