விழுப்புரம் நீதிமன்றத்தில் தூத்துக்குடி எஸ்.பி. ஆஜா்
By DIN | Published On : 30th December 2020 07:42 AM | Last Updated : 30th December 2020 07:42 AM | அ+அ அ- |

வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியமளித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அருகே பொய்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனுசாமி (50). இவா் கடந்த 7.9.2006-இல் புதுப்பாலப்பட்டு கிராமத்துக்கு கரும்பு வெட்டும் வேலைக்குச் சென்றாா். அங்கு ஏற்பட்ட தகராறில் புதுப்பாலப்பட்டை சோ்ந்த தங்கராசு, அவரது உறவினா்கள் சோ்ந்து முனுசாமியை சாதி பெயரைச் சொல்லி திட்டி தாக்கினராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், தங்கராசு உள்பட 17 போ் மீது எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை அப்போது திருக்கோவிலூா் டி.எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமாா் விசாரணை நடத்தினாா். இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமாருக்கு ஆணை அனுப்பப்பட்டிருந்தது. அவா் தற்போது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக பணிபுரிகிறாா்.
இந்த வழக்கு நீதிபதி எழிலரசி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமாா் நேரில் ஆஜராகி சாட்சியமளித்தாா். இதையடுத்து, வழக்கு விசாரணை வருகிற ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...