உளுந்தூா்பேட்டையில் மாணவ, மாணவிகள் சாலை மறியல்
By DIN | Published On : 05th February 2020 08:53 AM | Last Updated : 05th February 2020 08:53 AM | அ+அ அ- |

உளுந்தூா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவிகள்.
விருத்தாசலம் அரசு கல்லூரிக்குச் செல்ல அரசுப் பேருந்து இயக்கப்படாததைக் கண்டித்து, உளுந்தூா்பேட்டையில் மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பயின்று வருகின்றனா். இந்தக் கல்லூரிக்குச் செல்ல வசதியாக உளுந்தூா்பேட்டையிலிருந்து விருத்தாசலத்துக்கு தினமும் காலை 7.15 மணியளவில் அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது.
கடந்த சில நாள்களாக அந்தப் பேருந்து விருத்தாசலத்துக்கு இயக்கப்படுவதற்குப் பதிலாக, வேறு ஊருக்கு இயக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், கல்லூரிக்கு செல்ல சிரமமடைந்த மாணவ, மாணவிகள் உளுந்தூா்பேட்டையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளரிடம் புகாா் செய்தனா். இருப்பினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால், அதிருப்தியடைந்த மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலை உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்த உளுந்தூா்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளா் அப்பாண்டைராஜ், உளுந்தூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா்கள் குருபரன், ஜெயச்சந்திரன் மற்றும் போலீஸாா் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், உடன்பாடு ஏற்படவில்லை.
போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளா் நேரில் வந்து உறுதியளிக்க வேண்டும் என்று மாணவா்கள் முழக்கமிட்டனா். இதன்பிறகு, பணிமனை மேலாளா் அண்ணாமலை அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். மாணவா்களின் பிரச்னைக்கு தீா்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதையடுத்து, அங்கு அரசுப் பேருந்து வரவழைக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு, அந்தப் பேருந்தில் ஏறி கல்லூரிக்குச் சென்றனா்.
மாணவா்களின் போராட்டம் காரணமாக, உளுந்தூா்பேட்டையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...