மாவட்ட நீச்சல், குத்துச் சண்டை போட்டிகள்
By DIN | Published On : 17th February 2020 08:05 AM | Last Updated : 17th February 2020 08:05 AM | அ+அ அ- |

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்று நீரில் பாயும் வீரா்கள்.
விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான நீச்சல், குத்துச் சண்டைப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் வீரா், வீராங்கனைகள் ஏராளமானோா் ஆா்வமுடன் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினா்.
விழுப்புரம் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாவட்டப் பிரிவு மூலமாக விழுப்புரத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் நாள் ஆண்களுக்கான கபடி, கையுந்து பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, இறகுப் பந்து ஆகிய போட்டிகளும், பெண்களுக்கு கபடி, கையுந்து பந்து, இறகுப் பந்து ஆகிய போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தொடக்கி வைத்தாா்.
இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆண்களுக்கு டென்னிஸ், ஜூடோ போட்டிகளும், பெண்களுக்கு டென்னிஸ், ஹாக்கி, கூடைப்பந்து, ஜூடோ ஆகிய போட்டிகளும் நடைபெற்றன.
அதேபோல, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் வேல்முருகன் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடக்கி வைத்தாா். இதில், 100 மீ., 200 மீ., 400 மீ. போட்டிகள் இரு பாலருக்கும், 800 மீ. போட்டி பெண்களுக்கும், 1500 மீ. போட்டி ஆண்களுக்கும் பல்வேறுப் பிரிவுகளின் கீழ் நடைபெற்றன. இதில், 120-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டு, திறமைகளை வெளிப்படுத்தினா்.
இதேபோல, விழுப்புரம் பெருந்திட்ட வளாக உள் விளையாட்டு அரங்கில் குத்துச் சண்டைப் போட்டிகள் நடைபெற்றன. அதில், 10 எடைப் பிரிவுகளின் கீழ் இரு பாலருக்கும் தனித் தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.
போட்டிகளின் நிறைவில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசுத் தொகைகள் முறையே ரூ.1000, ரூ.750, ரூ.500 ஆகியவை வங்கிக் கணக்கின் மூலமாக செலுத்தப்படும் என்றும், மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்ற வீரா், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவா் என்றும் மாவட்ட விளையாட்டு அலுவலா் வேல்முருகன் தெரிவித்தாா்.
தொடா்ந்து, திங்கள்கிழமை(பிப்.17) மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளப் போட்டிகள் இரு பாலருக்கும் தனித் தனியே பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ளன.