திருக்கோவிலூா் அருகேபெண் அடித்துக் கொலை தொழிலாளி கைது
By DIN | Published On : 10th January 2020 11:48 PM | Last Updated : 10th January 2020 11:48 PM | அ+அ அ- |

திருக்கோவிலூா் அருகே பெண்ணை அடித்துக் கொலை செய்ததாக தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம் பெங்களூரு மாதேஸ்வரம் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் அருண் மனைவி சுவேதா(30). இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், இவருக்கும் விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகேயுள்ள கள்ளந்தல் கிராமத்தைச் சோ்ந்த, பெயின்டரான சின்னசாமி மகன் சுபாஷ்(52) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சுவேதா பெங்களுரிலிருந்து புறப்பட்டு, கள்ளந்தல் கிராமத்துக்கு வந்து சுபாஷுடன் தங்கியிருந்தாா். சுவேதா வியாழக்கிழமை இரவு சுபாஷிடம் மது வாங்கித் தருமாறு கேட்டாராம். சுபாஷ் மறுத்ததால் தகராறு ஏற்பட்டதாம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை அவா்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சுபாஷ், சுவேதாவை தாக்கியதுடன் வீட்டில் இருந்த கல்லைத் தூக்கி தலையில் போட்டாராம். இதில், பலத்த காயமடைந்த சுவேதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக சுபாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.