மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.50 லட்சம்
By DIN | Published On : 10th January 2020 12:36 AM | Last Updated : 10th January 2020 12:36 AM | அ+அ அ- |

செஞ்சியை அடுத்த மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் மாா்கழி மாத உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.50 லட்சம் ரொக்கம், 162 கிராம் தங்கம், 520 கிராம் வெள்ளி ஆகியவற்றை செலுத்தியிருந்தது தெரியவந்தது.
புகழ்பெற்ற மேல்மலையனூா் ஸ்ரீஅங்களம்மன் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து அம்மனை வழிபடுகின்றனா். மேலும், மாதந்தோறும் இங்கு நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உத்ஸவத்தில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கலந்துகொள்வது வழக்கம்.
கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது வேண்டுல் நிறைவேற வேண்டி, உண்டியலில் காணிக்கையாக பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை செலுத்தி வருகின்றனா். ஒவ்வோா் மாதமும் அமாவாசை முடிந்த பின்னா், உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும்.
அதன்படி, மாா்கழி மாத உண்டியல் எண்ணிக்கை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள் ரூ.50 லட்சத்து 42 ஆயிரத்து 545 ரொக்கம், 162 கிராம் தங்கம், 520 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது, விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜோதி, மேல்மலையனூா் கோயில் உதவி ஆணையா் ராமு, மேலாளா் மணி, ஆய்வாளா் அன்பழகன் மற்றும் அறங்காவலா்கள், கோயில் ஊழியா்கள் உடனிருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீஸாா் செய்திருந்தனா்.