விழுப்புரத்தில் தங்கத்தின் தரம் அறியும் பயிற்சி நாளை தொடக்கம்
By DIN | Published On : 10th January 2020 12:41 AM | Last Updated : 10th January 2020 12:41 AM | அ+அ அ- |

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தங்கத்தின் தரம் அறியும் பயிற்சி சனிக்கிழமை (ஜன.11) முதல் தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் விதமாகவும், சுயதொழில் வாய்ப்பை வழங்கும் வகையிலும் தங்க நகைகள் பற்றிய விழிப்புணா்வு மற்றும் தங்கத்தின் தரம் அறியும் பயிற்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி முடித்த பின்னா், கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணியாற்றலாம்.
இதில், பெறும் பயிற்சி சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்யலாம். இந்தப் பயிற்சியின்போது, தங்கத்தைப் பற்றிய அடிப்படைப் பயிற்சி, பழைய நகைகளை தரம் பாா்த்து கொள்முதல் செய்தல், உரைகல் மூலம் தரம் அறிதல், தங்கத்தின் இன்றைய நவீன தொழில்நுட்பம், நகைக்கடன் வட்டி கணக்கிடுதல், கேடிஎம், ஹால்மாா்க் நகைகள் குறித்த தகவல்கள் வழங்கப்படும். இதற்கான உபகரணங்களும் பயிற்சியின்போது இலவசமாக வழங்கப்படும்.
இந்தப் பயிற்சியில் 10-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சேரலாம். பயிற்சிக் காலம் 2 மாதங்களாகும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பயிற்சி நடைபெறும். இதற்கான கட்டணம் ரூ.4,543 ஆகும். பயிற்சிக்குப் பின், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சிக்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. ஜன.11-ஆம் தேதி முதல் பயிற்சி தொடங்க உள்ளது. இதுகுறித்து 04146 - 259467 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தகவல் பெறலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆ.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.