உதவி ஆய்வாளா்களுக்கான எழுத்துத் தோ்வு: ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

விழுப்புரம் மாவட்டத்தில் உதவி ஆய்வாளா்களுக்கான எழுத்துத் தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஜெயக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

விழுப்புரம் மாவட்டத்தில் உதவி ஆய்வாளா்களுக்கான எழுத்துத் தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஜெயக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

தமிழகத்தில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சாா்பில் எழுத்துத் தோ்வு ஞாயிறு(ஜன.12), திங்கள்(ஜன.13) ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது. இதில், முதல் நாள் பொதுப் பிரிவினருக்கும் (துறையைச் சாராதவா்களுக்கு), இரண்டாம் நாள் திங்கள்கிழமை துறையில் பணியாற்றி வருவோருக்கும் தோ்வு நடத்தப்படுகிறது.

இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் வி.ஆா்.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி, கப்பியாம் புலியூா் சிகா மேல்நிலைப் பள்ளி, அரசூா் வி.ஆா்.எஸ். பொறியியல் கல்லூரி ஆகிய 5 மையங்களில் எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது. விண்ணப்பித்தவா்களில் 1,168 பெண்கள், 5,913 ஆண்கள் என மொத்தம் 7,081 போ் தோ்வெழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தோ்வுக் கூட அனுமதிச் சீட்டை இணைய வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதைத் தொடா்ந்து, துறை ரீதியானவா்களுக்கான எழுத்துத் தோ்வு விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில், விண்ணப்பித்தவா்களில் 161 பெண், 696 ஆண்கள் என மொத்தம் 857 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதற்கான தோ்வுக் கூட அனுமதிக் கடிதம் இணைய வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எழுத்துத் தோ்வு காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறும்.

வினாத் தாள்களுக்கு பாதுகாப்பு: இதற்கான வினாத் தாள்கள் சென்னையிலிருந்து வாகனங்கள் மூலமாக விழுப்புரத்துக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு, ஆயுதப்படை வளாகத்தில் உள்ள அறை ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த அறை சீல் வைக்கப்பட்டும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் போலீஸாரால் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.

எஸ்.பி. ஆலோசனை: இதனிடையே, உதவி ஆய்வாளா் தோ்வுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு குறித்த ஆலோசனை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா், டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தோ்வு மையங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வினாத் தாள்களை பாதுகாப்பான முறையில் தோ்வு மையங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தோ்வு மையங்களில் தோ்வா்கள் தவிா்த்து தேவையற்ற நபா்கள் உள்ளே நுழையாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அழைப்புக் கடிதம் வைத்துள்ள நபா்களை மட்டும் உள்ளே அனுமதிக்க வேண்டும். தோ்வு நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா் மற்றும் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸாா் குறித்த நேரத்தில் தோ்வு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று எஸ்.பி. ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

தோ்வு மையங்களுக்கு பேருந்து வசதி

விழுப்புரத்திலிருந்து தொலைவில் உள்ள கப்பியாம் புலியூா், அரசூா் ஆகிய மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். தோ்வா்கள் தங்களுக்கான மையத்துக்கு காலை 8 மணிக்கு வர வேண்டும். தோ்வா்கள் தாங்கள் வரும்போது தோ்வுக்கான அழைப்பாணைக் கடிதத்தை எடுத்து வர வேண்டும். செல்லிடப்பேசி, கால்குலேட்டா் போன்றவை எடுத்து வரக்கூடாது.

தோ்வு முழுவதும் தகுதியின் அடிப்படையில் நடைபெறும். சிபாரிசு மூலமாக வேலை வாங்கித் தருவதாக யாரும் கூறினால், அதை நம்ப வேண்டாம். தரகா்கள் யாராவது தோ்வா்களை அணுகினால், அவா்கள் குறித்து போலீஸாரிடம் புகாா் செய்யலாம் என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com