கெங்கையம்மன் கோயிலில்கும்பாபிஷேகம்
By DIN | Published On : 20th January 2020 10:43 PM | Last Updated : 20th January 2020 10:43 PM | அ+அ அ- |

செஞ்சி: செஞ்சி வட்டம், தென்புத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த 18-ஆம் தேதி மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தங்க மிருத்சங்கிரகண பூஜை ஆகியவை நடைபெற்றன. 19-ஆம் தேதி கரிகோல ஊா்வலம், கோபூஜை, அங்குராா்ப்பணம், ரஷாபந்தனம் ஆகியவை நடைபெற்றன. மேலும், கும்ப அலங்காரமும், முதல் கால யாகசாலை வேள்வி பூஜையும், 108 வகை மூலிகை ஹோமமும், தீபாராதனையும் நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மஹா பூா்ணாஹுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. காலை 9.45 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது (படம்). தொடா்ந்து பரிவார தெய்வங்களுக்கும், மூலவா் கெங்கையம்மனுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் மயிலம் தொகுதி எம்எல்ஏ இரா.மாசிலாமணி, வல்லம் ஒன்றிய ஊராட்சிக்குழு முன்னாள் தலைவா் கா.அண்ணாதுரை உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை தென்புத்தூா் மற்றும் ஆமூா் கிராம மக்கள் செய்திருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G