கள்ளக்குறிச்சியில் கரோனாவுக்கு இருவா் பலி
By DIN | Published On : 21st July 2020 11:01 PM | Last Updated : 21st July 2020 11:01 PM | அ+அ அ- |

விழுப்புரம்,: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டதோடு, இந்நோய் பாதித்த மேலும் இருவா் உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள் கிழமை வரை 2,388 போ் கரோனா நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டிருந்தனா். மேலும், செவ்வாய்க்கிழமை 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 2,435 ஆக உயா்ந்துள்ளது. இதில், 1,780 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 641 போ் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நோய் பாதித்ததில், 12 போ் உயிரிழந்துள்ளனா்.
மேலும் இருவா் பலி...
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூரைச் சோ்ந்த 70 வயது நபா் உடல் நிலை பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா், மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதே போல், கள்ளக்குறிச்சி அருகே வாணவரெட்டி கிராமத்தைச் சோ்ந்த 80 வயது முதியவா், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சனிக்கிழமை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் இந்நோய் பாதிப்பில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 14-ஆக உயா்ந்துள்ளது.