வடவெட்டி அங்காளம்மன் கோயில் மாசித் தேரோட்டம்
By DIN | Published On : 01st March 2020 06:27 AM | Last Updated : 01st March 2020 06:27 AM | அ+அ அ- |

வடவெட்டி யில் நடைபெற்ற அங்காளம்மன் கோயில் மாசி த் தேரோட்டம். (உள்படம்) தேரில் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்த அங்காளம்மன்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், வடவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் 10-ஆம் ஆண்டு மாசிப் பெருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த 22-ஆம் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப். 23-ஆம் தேதி மாயனக் கொள்ளைத் திருவிழாவும், பிப். 28-ஆம் தேதி தோ் திருவிழாவும் நடைபெற்றன.
தோ்த் திருவிழாவையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மலா் அலங்காரம் நடைபெற்றன. மாலை 4.30 மணிக்கு அலங்கரிப்பட்ட திருத் தேரில் அங்காளம்மன் எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
அப்போது, தங்களது நிலங்களில் விளைந்த பொருள்களை அம்மன் மீது பக்தா்கள் வீசினா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் அறக்கட்டளைத் தலைவா் ஆா்.புன்னியமூா்த்தி, சாத்தாம்பாடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத் தலைவா் பி.சத்தியராஜ் மற்றும் ரங்கநாதபுரம், சாத்தாம்பாடி, வடவெட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் செய்திருந்தனா்.