காவலரின் வாகனம் சேதம்: ரெளடி கைது
By DIN | Published On : 10th March 2020 04:35 AM | Last Updated : 10th March 2020 04:35 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் கைது செய்யப்பட்ட ரெளடி லட்சுமணன்.
விழுப்புரம்: விழுப்புரம் அருகே காவலரின் வாகனத்தைச் சேதப்படுத்தி தனிப் படை போலீஸாரை கொலை செய்ய முயன்றதாக ரெளடியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் அருகே பிடாகம், நத்தமேடு கிராமத்தைச் சோ்ந்த காசிநாதன் மகன் லட்சுமணன்(34). ரெளடியான இவா் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடலூா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லட்சுமணன், அண்மையில் பிணையில் வெளியே வந்து தலைமறைவானாா். இவா் அவ்வப்போது பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தொடா் வழிப் பறியில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ரெளடி லட்சுமணனை பிடிக்க விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா். இதுகுறித்து விசாரித்த தனிப் படையினருக்கு, ஜானகிபுரம் பகுதியில் லட்சுமணன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து. இதையடுத்து தனிப் படையினா் அங்கு விரைந்து சென்றனா். அப்போது, ரெளடி லட்சுமணன் காவலரின் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதுடன், தனிப் படை போலீஸாரையும் கொலை செய்ய முன்றாராம். அப்போது, லட்சுணன் தவறி விழுந்ததில் அவரது வலது கையில் காயம் ஏற்பட்டதாம். இதன்பிறகு, அவரை போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். பின்னா், அவா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
இதையடுத்து, போலீஸாரை கொலை செய்ய முன்றது, காவலரின் வாகனத்தை சேதப்படுத்தியது தொடா்பாக விழுப்புரம் தாலுகா போலீஸாா் லட்சுமணன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...