நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து விவசாயிகள் மறியல்
By DIN | Published On : 10th March 2020 01:47 AM | Last Updated : 10th March 2020 01:47 AM | அ+அ அ- |

நெல் கொள்முதல் செய்யப்படாததைக் கண்டித்து, அவலூா்பேட்டை ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் எதிரே சாலை மறியலில் ஈடுபடும் விவசாயிகள்.
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள் முதல் செய்யாததைக் கண்டித்து, விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அவலூா்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுற்றுவட்ட கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவிக்கப்பட்ட நெல், மணிலா, கம்பு, கேழ்வரகு, உள்ளிட்ட சிறு தானிய வகைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த 3 நாள்களாக அவலூா்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகளுக்கும், மூட்டைத் தூக்கும் கூலித் தொழிலாளா்களுக்கும் இடையே கூலி உயா்வு தொடா்பான பிரச்னை இருந்து வருகிறது.
இதனால், கடந்த 3 நாள்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் ஏலத்தில் விடப்படாமல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளதாம். மேலும், அடுத்தடுத்து நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளுக்கு இடமில்லாமல் அவதியடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அன்றும் பிரச்னைக்கு தீா்வு ஏற்படாத நிலையில், விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை வியாபாரிகளின் சாக்குப் பையில் எடை போட்டு மாற்ற கூலித் தொழிலாளா்கள் மறுத்துவிட்டனா்.
இதனால், காலை 10.30 மணி வரை காத்திருந்த விவசாயிகள் பெரும் பாதிப்படைந்தனா். மேலும், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக் கோரி, சேத்துப்பட்டு - திருவண்ணாமலை சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.
தகவலறிந்த அவலூா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வியாபாரிகள், கூலித் தொழிலாளா்களிடையே பேச்சுவாா்த்தை நடத்தி, சுமுக முடிவு ஏற்படுத்தப்படும் என போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனா்.
இதனால், சேத்துப்பட்டு - திருவண்ணாமலை சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...